ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோனி நிச்சயம் விளையாடுவார், ஓய்வு பெறமாட்டார் என்று மே.இ.தீவுகள் வீரர் டிவைன் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்
உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி அடைந்து வெளியேறியபின் தோனி எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தோனி ஓய்வு அறிவிப்பாரா அல்லது தொடர்ந்து விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்காதீர்கள் என்று சமீபத்தில் தோனி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்
ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள டிவைன் பிராவோ சென்னை வந்துள்ளார். பிராவோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அவரிடம் தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் பதில் அளிக்கையில், " தோனி ஒருபோதும் இப்போதைக்கு ஓய்வு பெறமாட்டார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டி வரை விளையாடுவார் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டுக்கு வெளியில் இருந்து புறக்காரணிகள் ஏதும் தன்னை பாதிக்காமல் தோனி கவனமாக இருப்பார். எங்களுக்கும் தோனி கற்றுக்கொடுத்துள்ளார். எப்போதும் பதற்றப்படாதீர்கள், உங்கள் திறமையை நம்புங்கள் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
நான் உடல்ரீதியாக நலமாக இருக்கிறேன், எனக்கு ஏராளமான அழைப்புகள் வருகின்றன, களத்துக்கு வெளியே நடக்கும் பல்வேறு அரசியல் காரணமாகவே நான் ஓய்வு பெற்றேன். ஆனால், மே.இ.தீவுகள் அணியிலும், நிர்வாகத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிச்சயம் அணிக்குத் திரும்புவேன்.
மே.இ.தீவுகள் அணி இளம் வீரர்கள் கொண்ட வலிமையான அணி. இந்த இளம் வீரர்களின் திறமையை முறையாகப் பயன்படுத்தி விளையாடினால், ஆந்த்ரே ரஸல், சுனில் நரேன் போன்ற அனுபவ வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள். மீண்டும் உலகில் எந்த அணியையும் எங்களால் வீழத்த முடியும் " எனத் தெரிவித்தார்