இந்திய அணியின் நட்சத்திர வீரர், விக்கெட் கீப்பர், வெற்றிகர முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு குறித்த திட்டம் எதையும் அறிவிக்கவில்லை, அவருக்கான வாய்ப்பு திறந்தேயுள்ளது என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
தி இந்து, ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்துக்கு பிரசாத் கூறியதாவது:
தொழில்ரீதியான பொறுப்புகளை விடுத்துப் பார்க்கும் போது தேர்வுக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தோனியின் பெரிய விசிறியே. அவர் சாதிக்காதது என்ன? 2 உலகக்கோப்பைகள், சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்ட்டில் நம்பர் 1 என்று அவர் அனைத்தையும் சாதித்துள்ளார்.
மாஹி (தோனி) இதுவரை ஓய்வுத் திட்டம் எதையும் அறிவித்து விடவில்லை. தெரிவுகள் திறந்து கிடக்கின்றன. தோனி இது குறித்து முடிவெடுப்பார். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை, இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்புகள் ஆகியவற்றை கேள்வி கேட்க முடியாது.
ஆனால் அணித்தேர்வுக்குழுவாக நாங்கள் அவரைக் கடந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அடுத்தத் தலைமுறை வீரர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது.
ரோஹித் சர்மாவுக்குப் புகழாரம்:
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது நம்ப முடியாத திறமையை நாங்கள் அறிவோம். இப்போது டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமைகளை அவர் நிரூபித்து வருகிறார். ஒரேயொரு அயல்நாட்டு டெஸ்ட் தொடர் அவரது மனநிலையை முழுதும் மாற்றிவிடும் என்றார் பிரசாத்.