சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2-வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்தது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
இதில் இந்திய அணியில் ஒருநாள் தொடருக்காக ஷிகர் தவண் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், அவருக்கு காயம் ஏற்படவே உள்நாட்டுத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து உடல்நலம் தேறி டி20 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் திருவனந்தபுரம், மும்பையில் நடந்த போட்டிகளில் களமிறங்கினார். ஆனால், மும்பையில் நடந்த போட்டியின் போது புவனேஷ்வர் குமாருக்கு தசைநார் பிடிப்பில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து முழுமையாக புவனேஷ்வர் குமார் இன்னும் குணமாகவில்லை இதனால் ஒருநாள் தொடருக்கு புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதில் உமேஷ் யாதவ் நல்ல உடல்நலத்துடன் இருந்தபோதிலும் ஷர்துல் தாக்கூருக்கு தேர்வுக் குழுவினர் வாய்ப்பு அளித்துள்ளனர். ஷர்துல் தாக்கூர் சனி்க்கிழமை காலை இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.