மும்பையில் நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் டாப் 3 ஸ்டார்களான கோலி, ரோஹித், ராகுல் விளாசி எடுக்க இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
பிளே என்று நடுவர் குரல் கேட்டதுதான் தாமதம் கடைசி ஓவரில் தொப்பியை பவுலரிடம் கொடுக்கும் வரை இந்திய பேட்ஸ்மென்கள் வெளுத்துக் கட்டினார்கள். ரோஹித், ராகுல் அடித்தளம் அமைத்துக் கொடுக்க கேப்டன் விராட் கோலி தனது ரிஸ்ட் பவர் என்னவென்பதைக் காட்டி 29 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 70 ரன்களை வெளுத்து வாங்கினார்.
இந்நிலையில் தனது இன்னிங்ஸ் பற்றி ஆட்டம் முடிந்த பிறகு விராட் கோலி கூறியதாவது:
நிறைய பேசியாகி விட்டது. களத்தில் இறங்கி திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் முக்கியம். என் பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் வழக்கமாக இப்படியாட மாட்டேன். கே.எல்.ராகுலிடம் கடைசி வரை நீ நில், நான் கொஞ்சம் சாத்திக் கொள்கிறேன் என்றும் கூறினேன். திருமணமாகி 2வது ஆண்டு நிறைவடைந்த தினம், எனவே எனக்கு இது சிறப்புத் தினம்.
அனைத்து வடிவங்களிலும் ரன்கள் குவிக்க முடியும் என்பது என் தன்னம்பிக்கை. எதுவாக இருந்தாலும் அதில் மனதைச் செலுத்தினால் போதும். என் ரோல் மிக முக்கியமானது, நான் 2 ரோல்களையும் செய்ய வேண்டும், அடித்தும் ஆட வேண்டும். களத்தில் இவ்வாறு ஆடி நம்பிக்கை பெற வேண்டியுள்ளது.
ராகுலும், ரோஹித்தும் தெளிவாக களத்தில் ஆடினர். முதலில் பேட் செய்தால் அடிப்பதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்து வந்தது, ஆனால் இன்று அது இல்லை.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.