ரோஹித் சர்மா 
விளையாட்டு

ரோஹித் சர்மா புதிய சாதனை: காட்டடி அரை சதம்; ராகுல் விளாசல்

பிடிஐ

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மும்பையில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த இரு போட்டிகளாக ஜொலிக்காமல் ஆடிய ரோஹித் சர்மா போட்டி தொடக்கத்தில் இருந்து சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் விரட்டினார்.

காட்ரெல் வீசிய 2-வது ஓவரில் ரோஹித் சர்மா டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அப்போது டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டினார்.

இதுவரை 354 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா தனது 400-வது சிக்ஸரை அடித்தார். மிகக்குறைவான போட்டிகளில் 400-வது சிஸ்கரை அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

உலகஅளவில் சர்வதேச போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். முதலிடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 534 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 476 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். குறிப்பாக காட்ரெல் வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார் ரோஹித் சர்மா

அதன்பின் பியரே வீசிய 5-வது ஓவரில் ஒருபவுண்டரி, சிஸ்கர் விளாசினார் ரோஹித் சர்மா. பியரே வீசிய 8-வது ஓவரில் 2 சிஸ்கர்கள், ஒரு பவுண்டரி அடித்து அரங்கை அதிரவைத்தார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவுக்கு துணையாக ஆடிய கேஎல்.ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராகுல் கணக்கில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

SCROLL FOR NEXT