திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் நேற்று தொடங்கிய தமிழ்நாடு-கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ட்ராபி போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் கர்நாடகா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.
கர்நாடகா அணியில் தேவ்தத் படிக்கல் 78 ரன்களையும் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 43 ரன்களையும் எடுத்தனர். ஆட்ட முடிவில் ஷ்ரேயஸ் கோபால் 35 ரன்களுடனும் டேவிட் மத்தியாஸ் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 32 ஓவர்கள் வீசி 10 மெய்டன்களுடன் 68 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் முதல் நாள் ஆட்டம் தமிழக அணியின் மோசமான பீல்டிங் தினமாக அமைந்தன, கேட்ச்கள் விடப்பட்டன. முறையீடுகள் அனைத்தும் பயனற்று போனது.
தமிழ்நாடு அணி கடைசி நாளில் எதிரணியை சுருட்ட 4 ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தது, ஆனால் டாஸை தோற்றதால் கர்நாடகா முதலில் பேட் செய்தது.
மோசமான பீல்டிங்கினால் அதிகப் பயனடைந்த கர்நாடகா பேட்ஸ்மென் படிக்கல் ஆவார். இதனால் 182 பந்துகளில் அவர் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்தார். இடது கை வீரரான தேவ்தத் படிக்கல் 2 ரன்களில் இருந்த போது விஜய் சங்கர் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் கோட்டை விடப்பட்டது. பிறகு இவர் 7 ரன்களில் இருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் கொடுத்த மிக எளிதான கேட்ச் ஷார்ட் கவரில் விடப்பட்டது. பிறகு 64 ரன்களில் அவர் இருந்த போது முருகன் அஸ்வின் பந்தில் மிட் ஆனில் மிக எளிதான இன்னொரு கேட்ச் விடப்பட்டது, அனைத்துக் கேட்ச்களையும் விட்டவர் அறிமுக வீரர் சித்தார்த்.
சித்தார்த் 3 கேட்களை விட்டாலும் அவரது இடது கை சுழற்பந்து வீச்சு நன்றாக அமைந்தது, மயங்க் அகர்வாலை இவர்தான் வீழ்த்தினார். பிறகு பி.ஆர்.ஷரத்தை பவுல்டு செய்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கருண் நாயர் 8 ரன்களில் அஸ்வின், விஜய் சங்கர் கூட்டணியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கர்நாடகாவின் மற்றொரு வீரர் பவன் தேஷ் பாண்டே 65 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் ஆட்டம் தமிழக அணியின் மோசமான பீல்டிங்கினால் கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது.