ரஞ்சிக் கோப்பையையும், வாசிம் ஜாபரையும் பிரிக்க முடியாது. அனுபவ வீரரான வாசிம் ஜாபர் இன்று தனது 150-வது ரஞ்சிக் கோப்பை போட்டியில் களமிறங்கி புதிய வரலாறு படைத்தார்.
மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர், விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை எந்த வீரரும் உள்நாட்டுப் போட்டிகளில் 150-வது போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால், முதல் முறையாக வாசிம் ஜாபர் 150-வது ரஞ்சிப் போட்டியில் களமிறங்கி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றார்.
இதற்கு முன் இந்திய வீரர் தேவேந்திர பண்டேலா 145 முறையும், அமோல் மஜூம்தார் 136 முறையும் ரஞ்சிப் போட்டியில் களமிறங்கியுள்ளார். இதுதான் அதிகபட்சமாகும். ஆனால், அனைத்தையும் வாசிம் ஜாபர் முறியடித்துவிட்டார்.
விஜயவாடாவில் உள்ள தேவினேனி வெங்கட ராமண்ணா பிரணிதா மைதானத்தில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி லீக் ஆட்டம் இன்று தொடங்கியது.
41 வயதாகும் வாசிம் ஜாபர் 1996-97 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். இதுவரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடி 11 ஆயிரத்து 775 ரன்கள் ஜாபர் சேர்த்துள்ளார்.
253 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 19 ஆயிரத்து 147 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 51.19 ஆக வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் வாசிம் ஜாபர் 40 சதங்கள் அடித்துள்ளார்.
இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் வாசிம் ஜாபர் களமிறங்கியுள்ளார். இதில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாபர் 1,944 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடங்கும். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதமும் வாசிம் ஜாபர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.