2020-ம் ஆண்டு நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான முக்கியப் போட்டிகளிலும் ரஷ்யா தனது தேசியக் கொடியைப் பயன்படுத்தவும், தேசிய கீதத்தை இசைக்கவும் தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு (டபிள்யுஏடிஏ) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
போலியான ஆதாரங்கள் அளித்தல், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆவணங்களை அழித்தல் போன்றவற்றில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு இந்தத் தடையை ரஷ்யாவுக்கு விதித்துள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவது தொடர்பாக ரஷ்யாவில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் தகுதியும் ரத்து செய்யப்போகிறது. இந்த அனைத்து முடிவுகளுக்கும் சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பின் நிர்வாகிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேசமயம், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் முக்கியமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருக்கக் கூடாது. அவர்களின் ஊக்கமருந்து தொடர்பான புள்ளிவிவரங்கள் திருத்தப்பட்டு இருக்கக் கூடாது என்று சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு தெரிவித்துள்ளது
உலக சாம்பியன்ஷிப் போட்டி, கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று போன்றவற்றில் ரஷ்ய அணிகள் பங்கேற்கலாமா என்பது குறித்துத் தெளிவான அறிவிப்பு இன்னும் இல்லை. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து ரஷ்யா அடுத்த 21 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் உள்ள ஊக்கமருந்து சோதனைக் கூடத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு எடுக்கப்பட்ட ஊக்கமருந்து சோதனை மாதிரிகளில் தவறான விவரங்களையும், போலியான விவரங்களையும் அளித்ததாகக் கடந்த மாதம் தகவல் வெளியானது. இது தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு விசாரணை நடத்தியதில் ரஷ்யா அரசே இதில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்தத் தடை ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.