விளையாட்டு

முத்தரப்பு தொடர்: இந்தியா சாம்பியன் - 87 ரன்கள் விளாசினார் குருகீரத் சிங்

செய்திப்பிரிவு

ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.

227 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 21.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடு மாறியபோது, 6-வது வீரராக களமிறங்கிய குருகீரத் சிங் 85 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்ட ரிகளுடன் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்து வெற்றி தேடித் தந்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் உஸ்மான் கவாஜா-ஜோ பர்ன்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.4 ஓவர்களிள் 82 ரன்கள் சேர்த்தது. ஜோ பர்ன்ஸ் 41 ரன்களும், கேப்டன் கவாஜா 76 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்தவர்களில் அதிக பட்சமாக டிராவிஸ் ஹெட் 20, பெர்குசன் 21 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

இந்தியத் தரப்பில் கரண் சர்மா 3 விக்கெட்டுகளையும், அக் ஷர் படேல், குருகீரத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த் தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் அதிரடியாக ரன் சேர்த்த தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து கேப்டன் உன்முக்த் சந்த் 24, பின்னர் வந்த மணீஷ் பாண்டே 9, கருண் நாயர் 0, கேதார் ஜாதவ் 29 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 108 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால் சிக்கல் ஏற்பட்டது.

இதன்பிறகு குருகீரத் அசத்தலாக ஆட, மறுமுனையில் அக் ஷர் படேல் 16 ரன்களில் வீழ்ந்தார்.

இதனால் 28.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தடுமாறியது இந்தியா. இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுமுனையில் 62 பந்துகளில் அரைசதம் கண்டார் குருகீரத் சிங்.

பின்னர் வேகம் காட்ட தொடங்கிய குருகீரத் சிங், ஜம்பா ஓவரில் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை விளாச, 43.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. குருகீரத் சிங் 87, சாம்சன் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.

ஆட்டநாயகன் விருதை குருகீரத் சிங்கும், தொடர் நாயகன் விருதை மயங்க் அகர்வாலும் தட்டிச் சென்றனர்.

SCROLL FOR NEXT