விராட் கோலியைக் கண்டு மே.இ.தீவுகள் பவுலர் பயந்து விடக்கூடாது என்று கூறிய மே.இ.தீவுகளின் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் விளையாட்டாக சில வழக்கத்துக்கு விரோதமான வழிமுறைகளை நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.
அவர் நகைச்சுவையாகத் தெரிவித்தாலும் கோலி எப்படி மே.இ.தீவுகள் அணியை அச்சுறுத்தியுள்ளார் என்பது நமக்கு சூசகமாகவேனும் சிம்மன்ஸ் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை வீழ்த்துவது பற்றித்தான் பில் சிம்மன்ஸ் பேசியுள்ளார்.
“ஒன்று அவரை மட்டைக்குப் பதிலாக ஒரு ஸ்டம்புடன் தான் ஆட வேண்டும் என்று சொல்லிப்பார்க்கலாம். அல்லது அவருக்கு 100 ரன்களை விட்டுக்கொடுத்து மற்ற வீரர்களை குறிவைக்க வேண்டியதுதான், இல்லையெனில் ஒரே சமயத்தில் இரண்டுபவுலர்களை அவருக்கு வீசச் செய்ய வேண்டியதுதான்.
என்ன நடக்கும் என்று நாம் கூற முடியாது, ஒன்று மட்டும் உறுதி, விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
கடந்த முறை அவ்வளவு மோசமாக ஆடவில்லை, அதிலிருந்து பெற வேண்டியதைப் பெற்று அதனுடன் இன்னும் கொஞ்சம் சிறப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் இந்திய அணியும் தங்கள் ஆட்டங்களில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்த்திருப்பர்கள், இந்திய அணியை எங்கும் வீழ்த்துவது கடினம், இந்தியா இந்தியாதான்” என்றார் ஃபில் சிம்மன்ஸ்.