டிரெண்ட் பிரிட்ஜில் பிராடின் ஆவேசத்தினால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்த ‘வலுவான’ ஆஸ்திரேலிய அணியின் வேதனையை ஜோ ரூட் தன் சதத்தின் மூலம் அதிகரித்துள்ளார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. ஜோ ரூட் 19 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இரவுக்காவலனாக இறக்கப்பட்ட மார்க் உட் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
60 ரன்களுக்கே ஆஸ்திரேலியா மடிந்ததால் பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது இங்கிலாந்து. ஆனாலும் லித் நல்ல இந்த தருணத்தில் தனது பார்மை கண்டுபிடித்துக் கொள்ள தவறினார். அவர் 14 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தை மட்டை விளிம்பில் ஆட கேட்ச் ஆனது.
இயன் பெல்லுக்கு, ஸ்டார்க் மிகப்பெரிய இன்ஸ்விங்கரை வீசினார் நேராக கால்காப்பு எல்பி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், பெல்லின் ரிவியூ பயனளிக்கவில்லை.
அலிஸ்டர் குக் மீண்டும் ஒரு முறை சுவராக ஒரு புறம் நல்ல உத்தியுடன் ஆடினார். ஒரு முறை ஸ்மித், கிளார்க் இருவரும் வாய்ப்பு ஒன்றை கோட்டை விட்டனர். 43 ரன்கள் எடுத்த குக் 143 கிமீ வேக நேர் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். வேகத்தில் பீட் ஆனார் குக். 96/3 என்ற நிலையில் ஜோ ரூட், பேர்ஸ்டோ இணைந்து அபாரமாக விளையாடி 173 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
மிட்செல் ஜான்சன், ஸ்டார்க், ஹேசில்வுட் இடையே 53 ஓவர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஜோ ரூட் ஆஸ்திரேலிய பவுலர்கள் தவறு செய்த போது அடித்தும், சரியாக வீசும்போது தடுத்தும் நிதானத்தையும் சாதுரியத்தையும் காண்பித்தார்.
பேர்ஸ்டோ 105 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை ஒரு கவனமற்ற கணத்தில் பிளிக் செய்து நேராக ஷார்ட் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா எதிர்பார்க்காத விக்கெட் இது. 67 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ஜோ ரூட் 128 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் சதம் கண்டார்.
மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் 17 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜான்சன் 16 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டார். லயன், வார்னர் வீசினர் அவ்வளவுதான் மற்றபடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
மொத்தத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் வர்ணிப்பது போல் முதல் நாள் ஆட்டம் ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கறுப்பு தினம்” என்றே கூற வேண்டும்.