இந்திய வேகப் பந்து வீச்சாளர் பும்ராவை குழந்தை பந்து வீச்சாளார் என்று கூறியதற்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர் காணல் ஒன்றில் தனது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து அப்துல் ரசாக் கூறியிருப்பது ரசிகர்களிடையே சர்ச்சையாகி உள்ளது.
அப்துல் ரசாக் கூறியிருப்பதாவது, “ நான் எனது கிரிக்கெட் அனுபவத்தில் மெக்ராத், வசிம் அக்ரம் உள்ளிட்ட உலகின் சிறப்பான பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டுள்ளேன். அவ்வாறு இருக்கையில் பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களை எதிர் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. பும்ரா என் முன்னால் குழந்தை பந்துவீச்சாளர். அவரை நான் சிறப்பாக எதிர் கொள்வேன்”என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அப்துல் ரசாக்கை சமூக வலைதளங்களில் விமர்சித்தும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆதரவாக பதிவிவிட்டனர்.
அப்துல் ரசாக் இந்திய வீரர்களை விமர்சித்தது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் அப்துல் ரசாக் விமர்சித்திருந்தார்.