விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 27 பதக்கங்கள்

செய்திப்பிரிவு

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் நேற்று மட்டும் இந்தியா 27 பதக்கங்களை கைப்பற்றி யது.

13-வது தெற்காசிய விளை யாட்டு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மட்டும் இந்திய வீரர், வீராங் கனைகள் 11 தங்கம் உட்பட 27 பதக்கங்களை வென்று குவித்தனர்.

தடகளத்தில் 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலத்தையும், துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலத்தையும் இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினர். மேலும் வாலிபாலில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்றது. தேக்வாண்டோவில் ஒரு தங்கம், 3 வெண்கலப் பதக்கத்தை இந்திய வீரர்கள் கைப்பற்றினர். இதுதவிர டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் பந்தய தூரத்தை 3.54.18 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான அஜீத் குமார் (3.57.18) வெள்ளிப் பதக்கமும், நேபாளத்தின் தன்கா கார்கி (3.59.20) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

அதேவேளையில் மகளிருக் கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வின் சந்தா (4.34.51) வெள்ளிப் பதக்கமும், சித்ரா பாலகீஸ் (4.35.46) வெண்கலப் பதக்கமும் பெற் றனர். இலங்கையின் உதா குபுர லகே (4.34.34) தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அர்ச்சனா சுசீந்திரன் பந்தய தூரத்தை 11.80 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இலங்கையைச் சேர்ந்த தனுஜி அமாஷா (11.82) வெள்ளிப் பதக்கமும், லக்சிகா சுகந்த் (11.84) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கவிதா யாதவ் பந்தய இலக்கை 35 நிமிடம் 7.79 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல்

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா ஓட்டு மொத்தமாக 3 பதக்கங்களையும் அள்ளியது. இறுதி சுற்றில் 19 வயதான மெஹுலி கோஷ் 253.3 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளை யில் யங்கா சதங்கி (250.8) வெள்ளிப் பதக்கமும், ஸ்ரேயா அகர்வால் (227.2) வெண்கலப் பதக்கமும் பெற்றனர். அணிகள் பிரிவிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் கைப்பற்றியது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கெனவே இந்தியாவின் அபூர்வி சந்தேலா 252.9 புள்ளிகள் குவித்து உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இதை விட மெஹுலி கோஷ் 0.4 புள்ளிகள் அதிகமாக எடுத்த போதிலும் இது உலக சாத னையாக கருதப்படவில்லை. ஏனெ னில் தெற்காசிய விளையாட்டு போட்டி முடிவுகளை சாதனைகள் நோக்கத்தின் அடிப்படையில் சர்வ தேச துப்பாக்கி சுடுதல் சங்கம் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாலிபால்

ஆடவருக்கான வாலிபாலில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென் றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் செட்டை பாகிஸ்தான் 20-25 என கைப்பற்றியது. இதன் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக 25-15, 25-17, 29-27 என கைப்பற்றி தங்கம் வென்றனர்.

இதேபோல் மகளிர் பிரிவில் வாலிபால் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில் நேபா ளத்தை தோற்கடித்தது.

உயரம் தாண்டுதல்

ஆடவருக்கான உயரம் தாண்டு தலில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார். தெற் காசிய விளையாட்டு போட்டியில் இதற்கு முன்னர் கடந்த 2004-ம் ஆண்டு இலங்கையின் விஜ்சேகர 2.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் சர்வேஷ் அனில் குஷாரே.

மற்றொரு இந்திய வீரரான சேத்தன் பாலசுப்பிரமண்யா (2.16 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், வங்கதேசத்தின் மஹ்புஸூர் ரஹ்மான் (2.15 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான உயரம் தாண்டு தலில் இந்தியாவின் ஜிஸ்னா 1.73 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இலங்கையின் துலஞ்சலீ கும் (1.69 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனையான ரூபினா யாதவ் (1.69 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

பதக்க பட்டியல்..

2-வது நாளின் முடிவில் இந் தியா 18 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் என 43 பதக்கங்களை வென்று பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தது. நேபாளம் 23 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்லகம் என 44 பதக்கங்களுடன்முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

தஞ்சாவூர் தர்ஷினி

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கூடைப்பந்து அணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த தர்ஷினி திருநாவுக்கரசு இடம் பெற்றுள்ளார். தென்னக ரயில்வே ஊழியரான தர்ஷினியின் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகேயுள்ள வாண்டையார் இருப்பு கிராமம் ஆகும். இவர், தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவியும், மாமன்னன் ராஜராஜன் கூடைப்பந்து அகாடமியின் முன்னாள் மாணவியும் ஆவார்.

SCROLL FOR NEXT