இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை டிரா செய்த நியூஸிலாந்து அணி தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஹாமில்டன் நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 375 ரன்களும், இங்கிலாந்து அணி 476 ரன்களும் குவித்தன. 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
ஜீத் ராவல் 0, டாம் லேதம் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 37, ராஸ் டெய்லர் 31 ரன்களுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். 3 முறை எளிதாக ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் தனது 21-வது சதத்தையும், ராஸ் டெய்லர் 184 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் தனது 19-வது சதத்தையும் விளாசினர்.
75 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது வில்லியம்சன் 104, ராஸ் டெய்லர் 105 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக தொடர்ந்து ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மவுன்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது நியூஸிலாந்து அணி.