`ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், தனது முதல் போட்டியில் மணிப்பூர் டி.ஆர்.ஏ.யு. கால்பந்து அணியை வென்று வெற்றிக் கணக்கைத் தொடங்கியது சென்னை சிட்டி எஃப்.சி. அணி (சிசிஎஃப்சி). அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில், `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டி, நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் பங்கேற்றுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி எஃப்.சி. அணி இந்த சீசனின் முதல் போட்டியில், மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலைச் சேர்ந்த டி.ஆர்.ஏ.யு. அணியுடன் நேற்று மோதியது. கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப்போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் மழை குறுக்கிட்டபோதும், போட்டி தொடங்கியபோது மழை நின்று, ரசிகர்களை அச்சத்தைப் போக்கி, மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினார் சென்னை சிட்டி எஃப்.சி. அணியின் நட்சத்திர வீரர் பெட்ரோ மான்சி. இதேபோல கோல் போடக் கிடைத்த பல வாய்ப்புகளை சென்னை சிட்டி எஃப்.சி. அணி தவறவிட்டது. குறிப்பாக 30-வது நிமிடத்தில் அஜித்குமார் எடுத்துக் கொடுத்த பந்தை கோல் போஸ்டுக்கு தட்டினார் பெட்ரோமான்சி. துரதிருஷ்டவசமாக அது கம்பத்துக்குள் செல்லாமல், வெளியேறியது. இடைவேளை வரை இரண்டு அணிகளுமே கோல்போடவில்லை.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எஃப்.சி. அணியின் வீரர் அடோல்ஃபோ மிராண்டா முதல் கோலைப் போட்டு, அணியை முன்னிலைக்கு கொண்டுசென்றார். எனினும், அதற்குப் பிறகு எந்த அணியும் கோல் போடவில்லை. சென்னை சிட்டி எஃப்.சி. அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தபோதும், கோல் போடப்படவில்லை. இதையடுத்து 1-0 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை சிட்டி எஃபி.சி. அணி வெற்றிவாகை சூடியது.
ஒரு கோல் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த அடோல்ஃபோ மிராண்டா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்னை சிட்டி எஃப்.சி.அணியின் மேலாண் இயக்குநர் ரோஹித் ரமேஷ் பரிசு வழங்கினார். இந்தப் போட்டியை `டி ஸ்போர்ட்ஸ்' சேனல் நேரடியாக ஒளிபரப்பியது. கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 21-ம் தேதி மாலை 7 மணியளவில், சென்னை சிட்டி எஃப்.சி. அணியும், மணிப்பூர் நெரோகா அணியும் மோதுகின்றன.