விவிஎஸ் லட்சுமண், சச்சின் டெண்டுல்கர் : படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

மீண்டும் சச்சின், வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பதவி: பிசிசிஐ சூசகம்

பிடிஐ

இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண் ஆகியோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இருந்தபோது, ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்தில் பதவி விலகினார்கள்.

பிசிசிஐ நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் இரட்டைப் பதவி ஆதாயம் தொடர்பாக வழங்கப்பட்ட புகாரால் கங்குலி, சச்சின், லட்சுமண் பதவி விலகினார்கள்.

தற்போது, பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி வந்துள்ளதால், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவி் மீண்டும் சச்சினையும், வி.வி.எஸ்.லட்சுமணையும் உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இதுகுறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் சிஏசி குழுவில் இருந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். விரைவில் அவர்கள் அந்த குழுவுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளரைத் தேர்வு செய்ய இருந்த நேரத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதால், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.

இப்போது கங்குலி பிசிசிஐ தலைவராக வந்துள்ளதால், சிஏசி குழுவுக்கு மீண்டும் இருவரையும் உள்ளே அழைத்துவர முடிவு செய்துள்ளார். மும்பையில் நாளை பிசிசிஐ அமைப்பின் 88-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT