ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் 73 ஆண்டுகளாக முறியடிக்காமல் இருந்த சாதனையை இன்று முறியடித்து புதிய வரலாறு படைத்தார்
கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக டெஸ்ட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எட்டி, 73 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்த இங்கிலாந்து வீரர் வாலே ஹாமாண்ட் சாதனையை ஸ்மித் இன்று தகர்த்தார்.
கடந்த 1946-ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் வாலே ஹாமாண்ட் தனது 131 இன்னங்ஸில் 7 ஆயிரம் ரன்களை எட்டி இருந்தார். இதை இதுவரை கிரிக்கெட் உலகில் எந்தவீரரும் இதை முறியடிக்கவில்லை. ஆஸ்திரேலிய ஜாம்பவான் டொனால்ட் பிராட்மேன் கூட இந்த சாதனையை முறியடிக்கவில்லை. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் தனது 126 இன்னிங்ஸில் 7 ஆயிரம் ரன்களை எட்டி ஹாமாண்ட் சாதனையை முறியடித்துள்ளார்.
அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் நடந்து வருகிறது. இதில் 34 ரன்களை எட்டியபோது ஸ்மித் இந்த அரிய வரலாற்று நிகழ்வைப் படைத்தார். அதாவது பாகிஸ்தான் வீரர் முகமது மூசாவின் ஓவரில் ஒரு ரன் எடுத்தபோது இந்த சாதனையை ஸ்மித் நிகழ்த்தினார்
டெஸ்ட் உலகில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகிய ஸ்மித் தற்போது 126 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸிலும், வீரேந்திர சேவாக் 134 இன்னிங்ஸிலும் 7 ஆயிரம் ரன்களை எட்டினார்கள். மே.இ.தீவுகள் வீரர் சோபர்ஸ்138 இன்னிங்ஸிலும், சுனில் கவாஸ்கர் 140 இன்னிங்ஸிலும் 7 ஆயிரம் ரன்களை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கக்கூடிய டான் பிராட்மேனின் 6,996 ரன்களையும் ஸ்மித் 70 டெஸ்ட் போட்டிகளில் கடந்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவுக்காக பிராட்மேன் 6,996 ரன்கள் அடித்துள்ள நிலையில் அவரின் ரன் குவிப்பையும் ஸ்மித் முறியிடித்து 7 ஆயிரம் ரன்களை ஆஸ்திரேலய அணிக்காக அடித்துள்ளார். பிராட்மேன் 52 போட்டிகளில் 6,996 ரன்கள் சேர்த்தநிலையில், ஸ்மித் 70 டெஸ்ட்களில் 7 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இதன் மூல் ஆஸ்திரேலியாவுக்கு அதிகமான ரன்கள் சேர்த்த 11-வது வீரர் எனும் பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் 774 ரன்களை 5 டெஸ்ட்போட்டிகளில் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிலெய்டில் நடந்து வரும்2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் சேர்த்துள்ளது. வார்னர் இரட்டை சதம் அடித்து 270 ரன்களை எட்டியுள்ளார். 33 பவுண்டரிகளை அடித்துள்ளார் வார்னர்.