ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரதான தலைமைப் பயிற்சியாளர்களாக அயல்நாட்டினரை நியமித்தாலும் ‘உதவிப் பயிற்சியாளர்கள்’ பதவிக்கு ஏகப்பட்ட இந்தியத் திறமைகள் இங்கு உள்ளன, ஆனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று முன்னால் ‘சுவர்’ ராகுல் திராவிட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லக்னோவில் ராகுல் திராவிட் கூறும்போது, “நம்மிடம் நிறைய பயிற்சியாளர்கள் உள்ளனர், நல்ல பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட்டில் வீரர்கள் அளவில் நம்மிடம் எப்படி நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனரோ, அதே போல் பயிற்சியாளர்கள் தரப்பிலும் நல்ல திறமைசாலிகள் உள்ளனர்.
அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்கள் சோபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். நிச்சயம் வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஐபிஎல் அணிகள் உதவிப் பயிற்சியாளர்களாக இந்திய பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பல வேளைகளில் எனக்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. உள்ளபடியே கூற வேண்டுமெனில் ஏகப்பட்ட இந்திய வீரர்கள் ஐபில் கிரிக்கெட்டில் ஆடுகின்றனர். உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு உள்நாட்டு வீரர்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியும். மைதானங்கள், பிட்ச்கள் பற்றிய அறிவும் இவர்களுக்கு அதிகம் எனவேதான் ஐபிஎல் அணிகள் இந்தியப் பயிற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஐபிஎல் அணிகள் இந்திய பயிற்சியாளர்களைப் பயன்படுத்தாதன் மூலம் உத்தி ரீதியாகத் தவறுகள் இழைக்கின்றனர்” என்றார் திராவிட்.