விளையாட்டு

ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்: கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தோனி  மீண்டும் மழுப்பல்

செய்திப்பிரிவு

தோனி அடுத்த டி20 உலகக்கோப்பையில் ஆட வேண்டுமெனில் ஐபிஎல் போட்டிகளில் ஆட வேண்டும் அதில் எப்படி ஆடுகிறார் என்பதைப்பார்க்க வேண்டும், மற்ற விக்கெட் கீப்பர்களின் அப்போதைய பார்முடன் தோனியின் பார்மை ஒப்பிட்டுத்தான் இந்திய அணிக்குள் தேர்வு செய்ய முடியும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

உண்மையில் எந்த விதமான வெளிப்படைத்தன்மையும் அற்ற பிசிசிஐ தோனியை நீக்கியுள்ளோம் என்று கூற தைரியமற்று மழுப்பலாக பல்வேறு விதங்களில் அவரது இன்மையைப் பற்றி கூறிவருகிறது.

நிச்சயம் தோனி தன் திட்டங்களை, அல்லது நிலையை அணித்தேர்வுக்குழுவிடம் தெரிவித்திருக்கலாம் என்றே ஐயம் எழுகிறது. பிசிசிஐ அதனை வெளியிடாமல் மழுப்பலாக கூறிவருகிறது என்று பலவிதமான ஐயங்களுக்கு பிசிசிஐ-யின் செயல்பாடும், தோனியின் செயல்பாடும் ரசிகர்களை இட்டுச் செல்கிறது.

இந்நிலையில் பனேரியாவின் புதிய ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்த விழாவில் தோனி தன்னால் மறக்க முடியாத இரு சம்பவங்களாக 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளையும் அதனால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட உற்சாகத்தையும் தன்னால் மறக்கவே முடியாது என்று பகிர்ந்து கொண்டார்.

ஒரு புறம் தேர்வுக்குழு தலைவர் பிரசாத், தோனியிடமிருந்து நகர்ந்து விட்டோம் ரிஷப் பந்த் தான் சில காலங்களுக்கு விக்கெட் கீப்பர் என்று கூற ரவிசாஸ்திரியோ தோனிக்கு இன்னமும் நுழைய வாய்ப்புள்ளது என்ற ரீதியில் பேச ஏதோ ஒன்றை மறைப்பதால் முரண்பாடான அறிக்கைகள், கருத்துகள் வெளிவந்து கொண்டிருப்பதாக பலருக்கும் ஐயம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை முன்னிட்டாவது தோனி வெளிப்படையாக என்ன நடக்கிறது என்று கூறியிருக்க வேண்டும் ஆனால் நேற்றும் (புதன்) அவர் அனைவரின் ஊகத்திற்கு தீனி போடும் விதமாக ஏன் இந்த ஓய்வு, ஏன் இந்த இடைவெளி என்ற கேள்விக்கு இடைமறித்து, “ஜனவரி வரை எதுவும் கேட்க வேண்டாம்” என்று மீண்டும் ஒரு பூடகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி விஷயத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.

-தி இந்து ஸ்போர்ட்ஸ்டார்

SCROLL FOR NEXT