விளையாட்டு

என்.சீனிவாசன் பங்கேற்றதால் சலசலப்பு: பிசிசிஐ செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

பிடிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டத்தில் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் பங்கேற்றதால் சலசலப்பு ஏற்பட்டது. அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐ தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை விதித்துள்ள நிலையில், பிசிசிஐ கூட்டத்தில் கலந்துகொள்ள அவரை அனுமதிக்கலாமா என்பது குறித்து தெளிவாகத் தெரியாததால் கூட்டத்தை ஒத்திவைத்தார் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா.

பிசிசிஐ செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந் தது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக பிசிசிஐ சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது. சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக வேறு இரண்டு அணிகளை சேர்ப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவிருந்தது. இதுதவிர மேலும் பல முக்கிய பிரச்சினைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தன.

இந்தக் கூட்டம் தொடங்கியபோது அதில் என்.சீனிவாசனும் பங்கேற்றிருந்தார். பிசிசிஐ தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள சீனிவாசன் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து சிலர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதனால் எந்த முரண்பாடும் இல்லை எனக்கூறி தனது தரப்பு நியாயத்தை முன்வைக்க முயன்றார்.

ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிசிசிஐ உறுப்பினர்கள் சிலர், பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என வாதிட்டனர். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பிசிசிஐ சட்ட ஆலோசகர் உஷாநாத் பானர்ஜி யிடம் கேட்டபோது, சீனிவாசன் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என தெரிவித்துவிட்டார். அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது” என்றார்.

SCROLL FOR NEXT