சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளார்கள்
வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார்.
தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறிய முகமது ஷமி 790 புள்ளிகளுடன் தனது வாழ்நாளில் சிறந்ததாக 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கபில்தேவ்(877), பும்ரா(832) ஆகியோருக்குப்பின் அதிக புள்ளிகள் பெற்று ஷமி சாதித்துள்ளார்
அதேபோல இந்திய வீரர் மயங்க் அகர்வால் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்து 243 ரன்கள்சேர்த்து அசத்தினார். 8 டெஸ்ட் போட்டிகளில் 858 ரன்கள் சேர்த்துள்ள அகர்வால் இதுவரை 691 புள்ளிகளைச் சேர்த்துள்ளார்.
முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன்களைச்சேர்த்தவர்களில் இதுவரை 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்தார்கள். இப்போது 8-வதாக அகர்வால் சேர்ந்துள்ளார். டான்பிராட்மன்(1,210), எவர்டன் வீக்ஸ்(968), சுனில் கவாஸ்கர்(938), மார்க் டெய்லர்(906), ஜார்ஜ் ஹெட்லி(904), பிராங் வோரல்(890), ஹெர்பெட் சட்கிளிப்(872) ஆகியோர் இருந்தார்கள். இப்போது அகர்வால் இணைந்துள்ளார்
இதுதவிர இசாந்த் சர்மா(20-வது இடம்), உமேஷ் யாதவ்(22-வதுஇடம்) ஆகியோர்தலா ஒரு இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். ரவிந்திர ஜடேஜா 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்
பந்துவீச்சாளர்கள் வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி இதுவரை 300 புள்ளிகளைக் குவித்துள்ளது. இலங்கை, நியூஸிலாந்துஅணிகள் தலா 60 புள்ளிகளுடனும், இங்கிலாந்து, ஆஸ்திரேலய அணிகள் 56 புள்ளிகளுடனும்உள்ளன.
பாகிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியஅணியுடன் விளையாட உள்ளது. இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் பிரிஸ்பேனிலும், 2-வது ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாகவும் நடக்கிறது