விளையாட்டு

அணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம் திறப்பு

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தான் அணியில் தான் சூதாட்டம் உள்ளிட்ட தவறான பாதையில் சென்ற வீரர்களுடனேயே விளையாட நேரிட்டது என்று ஷோயப் அக்தரின் யூடியூப் பக்கத்தில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீச் மனம் திறந்துள்ளார்.

தவறான வழியில் சென்ற வீரர்கள் குறித்து தான் வாயைத் திறக்க முயற்சித்த போதெல்லாம் ‘பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆடவேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு’ என தன் வாய் அடக்கப்பட்டது என்று ஹபீஸ் அங்கலாய்த்துள்ளார்.

ஹபீஸ் கூறியதாவது:

அந்த வீரர்கள் என் சகோதரர்கள் போன்றவர்கள், நான் அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். ஆனால் அவர்கள் என்ன செய்தார்களோ அதற்கு நான் உடன்படமாட்டேன், எதிர்க்கிறேன்.

நான் இந்தப் போக்குக்கு எதிராக குரல் எழுப்ப முயன்றேன். அப்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆடவே செய்வார்கள், நீயும் பாகிஸ்தானுக்கு ஆட விருப்பப்பட்டால் வாயைமூடிக்கொண்டிரு என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே நான் என்னுடைய பாசிட்டிவ் ஆன எனர்ஜியை பாகிஸ்தானுக்காகச் செலவிடாமல் இருக்க வேண்டுமா என்று நானும் வாளாவிருந்தேன். தவறு என்றாலும் நானும் அவர்களுடன் ஆடிக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் இப்போதும் கூறுகிறேன், அது போன்ற வீரர்களை மீண்டும் அழைத்து ஆடுவது தவறு, பாகிஸ்தான் அணிக்கு அது பலனளிக்காது, என்றார்.

ஷோயப் அக்தரும் ஏற்கெனவே தானும் சூதாட்ட வீரர்களுடனேயே விளையாட நேரிட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT