கிறிஸ் கெயில் : கோப்புப்படம் 
விளையாட்டு

ஐபிஎல் 2020: கெயிலை தக்க வைத்தது பஞ்சாப் அணி;8 சீசன் வீரர், ரூ.7.2 கோடி வீரர், ரூ.8கோடி தமிழக வீரர் விடுவிப்பு

பிடிஐ


2020-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தையொட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 சீசன்களான அணியில் விளையாடிய வீரரையும், இங்கிலாந்து ஆல்ரவுண்டர், நியூஸிலாந்து பந்துவீச்சாளரையும் கழற்றிவிட்டுள்ளது

அதேசமயம், மேட்ச் வின்னராக இருகக்க கூடிய மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் பஞ்சாப் அணியில் கடந்த 8 சீசன்களாக விளையாடி வருகிறார். இதுவரை 79 போட்டிகளில் விளையாடி 1,850 ரன்களை மில்லர் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 138 ஆகவும் வைத்துள்ளார். ஆனால், அவரைத் தக்கவைக்காமல் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் அணியில் தொடக்கத்தில் இடம் பெற்றபோது மில்லர் சரியாக விளையாடாவிட்டாலும், அதன்பின் நடந்த சீசன்களில் 416, 446 ரன்கள் குவித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

கிங்ஸ்லெவன்அணியின் நிர்வாகி கூறுகையில், " பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக மில்லர் கேட்டுக்கொண்டதால் அவரின் முடிவுக்கு மதிப்பளித்து அவரை விடுவித்தோம். அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்

கடந்த சீசனில் மில்லர் 10 போட்டிகளில் விளையாடி 213 ரன்கள் சேர்த்திருந்தார்

அடுத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், இவர் கடந்த முறை ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு வாங்கப்பட்டவர். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சாம் கரன் கடந்த ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.அவரையும் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கடந்த முறை ஏலத்தில் ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரையும் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது.அதேபோல நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், 40 வயதாகி விளையாடி வரும் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் கடந்த ஆண்டு அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரை பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது.

கெயில் குறித்து நெஸ் வாடியா கூறுகையில், "கெயில் மேட்ச் வின்னர், சாம்பியன் வீரர். அவரை விடுவிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்

இதுதவிர பஞ்சாப் அணி அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வழங்கிவிட்டு அங்கிருந்து கர்நாடக சுழற்பந்துவீச்சாளர் சுசித்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT