இந்தூரில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி டக் அவுட்டில் வெளியேற, மயங்க் அகர்வால்,புஜாரா அரை சதம் அடித்துள்ளனர்.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் 91 ரன்களிலும், ரஹானே 47 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணியைக் காட்டிலும் இந்திய அணி 38 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
இந்தூரில் வங்கதேசம்- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி முதல் நாளான நேற்று இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தது. அதன்பின் நிதானமாக ஆடிய நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்திருந்தது.
களத்தில் புஜாரா 43 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இருவரும் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
காலை நேரப் பனியின் ஈரப்பதத்தை பயன்படுத்திக் கொண்ட வங்கதேச வீரர்கள் அகர்வாலுக்கும் புஜாராவுக்கும் நெருக்கடி தரும் விதத்தில் பந்து வீசினார்கள். இதனால், ரன் சேர்ப்பதில் சிறிது தேக்கம் இருந்தது.
ஓரளவுக்கு சமாளித்து ஆடி, சில பவுண்டரிகளை அடித்து புஜாரா 58 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் நிதானமாக ஆடி வந்தார் புஜாரா .
வேகப் பந்துவீச்சாளர் அபு ஜயித் வீசிய பந்து ஆப்-சைடில் விலகிச் சென்றது. அதை தட்டிவிடும் முயற்சியில் புஜாரா அடிக்க முயல அது பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்றது. அப்போது 4-வது ஸ்லிப்பில் நின்றிருந்த மாற்றுவீரர் சைப் ஹசன் அருமையான டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.
புஜாரா 9 பவுண்டரிகள் உள்பட 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு அகர்வால், புஜாரா இணை 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். 32 ஓவரை அபு ஜயித் வீசினார். ஓவரின் 5-வது பந்தில் கால்காப்பில் வாங்கிய கோலிக்கு நடுவர் அவுட் தரவில்லை.
இதனால், டிஆர்எஸ் முடிவுக்கு வங்கதேச கேப்டன் மோமினுள் சென்றார். டிவி ரீப்ளேயில் விராட் கோலியின் லென்த்தில் வந்த பந்தை நன்றாக கால்காப்பில் வாங்கி மறைத்து ஆடுவது உறுதியானதால், அவுட் வழங்கப்பட்டது. இதையடுத்து கோலி டக் அவுட்டில் வெளியேறினார்.
ரஹானே களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். பொறுமையான ஆடிய அகர்வால் 98 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் அகர்வாலின் ஆட்டத்தில் வேகம் காணப்பட்டது. சில பவுண்டரிகளையும், அடித்து ஸ்கோரை விரைவுப்படுத்தினார்.
மெஹதி ஹசன் ஓவரில் நின்றுகொண்டு ஆப்-சைடில் ஒரு சிக்ஸர் அடித்து அகர்வால் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஏற்றார்போல், ரஹானேவும் சில பவுண்டரிகள் அடித்தார்.
ரஹானே 34 ரன்கள் சேர்த்தபோது, டெஸ்ட் அரங்கில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய 16-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.