இந்தூரில் நடந்து வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டினார்.
இந்தூரில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே திணறிய வங்கதேசம் அணி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நண்பகல் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின் மீண்டும் ஆட்டத்தை வங்கதேசம் அணி தொடர்ந்தது. கேப்டன் மோமினுள் ஹக் 37 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது அஸ்வின் இந்தியக் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டினார்.
இதற்கு முன் உள்நாட்டளவில் 250 விக்கெட்டுகள் அதற்கு மேல் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகிய இருவர் மட்டுமே வீழ்த்தி இருந்தனர். இப்போது உள்நாட்டில் மட்டும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை அஸ்வின் பெற்றார். அதுமட்டுமல்லாமல் வேகமாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.
முத்தையா முரளிதரன் 40 டெஸ்ட் போட்டிகளிலும் அனில் கும்ப்ளே 41 டெஸ்ட் போட்டிகளிலும் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வின் 42 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணி 53 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது. லிட்டன் தாஸ் 21 ரன்னிலும், முஷ்தபிசுர் ரஹிம் 43 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.