மன உளைச்சல், ஒருவகையான விரக்தி மனோபாவம், அயர்ச்சி காரணமாக கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விடைபெற்றிருக்கிறார், இந்த முடிவை இந்திய கேப்டன் விராட் கோலி வரவேற்றுள்ளார்.
மேலும் கிளென் மேக்ஸ்வெல் மனம் திறந்து இவ்வாறு வெளிப்படையாகக் கூறி இடைக்கால ஓய்வு பெற்றது மிகவும் அரிதான ஒன்று பாராட்டத்தக்கது என்றும் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
மேலும், 2014 இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து கோலியின் மோசமான டெஸ்ட் தொடரான சமயத்தில் தனக்கும் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி விடலாம் என்ற எண்ணம் மேலோங்கியதாக மனம் திறந்துள்ளார் விராட் கோலி.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “ஆம், நான் அதற்காகத்தான் இருக்கிறேன், எங்களுக்கும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, உங்களுக்கும் வேலைகள் உள்ளன. என்ன செய்ய வேண்டுமோ அதில் அனைவரும் கவனம் செலுத்து வருகிறோம். எனவே இன்னொருவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கணிப்பது கடினம்.
என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் கிளென் மேக்ஸ்வெலுக்கு ஏற்பட்ட ஒரு மன உணர்வு எனக்கும் ஏற்பட்டது, உலகமே முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வாகும் அது. 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரிடம் என்ன கூறுவது, என்ன பேசுவது என்று ஒன்றும் புரியவில்லை. அதாவது என் மனநிலை சரியாக இல்லை நான் ஆட்டத்திலிருந்து விலகுகிறேன் என்று கூறவில்லை அவ்வளவுதான், ஆனால் உள்ளுக்குள் அதே உணர்வுதான். ஆனால் வெளியே இதைச் சொன்னால் அது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று உள்ளபடியே எனக்குத் தெரியவில்லை.
எனவே இந்த உளவியல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது ஒரு வீரர் முக்கியமானவர், இந்திய அணி முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமெனில் இவர் முக்கியம் என்று கருதப்படும் வீரர் என்று ஒருவர் கருதப்பட்டால் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வது அவசியம். அதுவும் சர்வதேச மட்டத்தில் எந்த ஒரு வீரரும் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
அதனால்தான் கிளென் மேக்ஸ்வெல் செய்தது மிகவும் பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது. உதாரணமாகத் திகழ்ந்துள்ளார், விளையாட முடியாத மனநிலை முயன்று முயன்று பார்க்கிறார், ஆனால் மனிதனாக எவ்வளவு செல்ல முடியும்? அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு. கைவிட வேண்டும் என்று கூறவில்லை, ஆனால் தெளிவு வேண்டும் என்று கூறுகிறேன்.
வீரருக்கு இடைவெளி தேவைப்படுகிறதா அதை வெளிப்படுத்த வேண்டும், அவரது முடிவை எதிர்மறையாகப் பார்க்காமல் மதிக்க வேண்டும். வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும் இப்படி ஒரு மனநிலை ஏற்படலாம் எனவே இதனை நேர்மறையாக அணுக வேண்டும்” என்று மனம் திறந்தார்.