கிராஸ் இஸ்லெட்
கிராஸ் இஸ்லெட் நகரில் நடந்த மே.இ.தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சச்சின் சாதனையை 15 வயது இந்திய வீராங்கனை முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஜோடி ஸ்மிருதி மந்தனா 67 ரன்களும், 15 வயதான ஷாபாலி வர்மா 73 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 143 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஆட்ட நாயகன் விருது ஷாபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்து 84 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர்கள் ராதா யாதவ், பூணம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தீப்தி சர்மா, பூஜா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஷாபாலி வர்மா தனது சர்வதேச முதல் அரை சதத்தைப் பதிவு செய்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். இதுவரை 5 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஷாபாலி இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் சேர்த்தார்.
சச்சின் டெண்டுல்கர் 16 வயது, 213 நாட்கள் ஆனபோதுதான் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது அரை சதத்தைப் பதிவு செய்தார்.
ஆனால், சச்சினைக் காட்டிலும் மிகக் குறைந்த வயதில் சர்வதேச அளவில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஷாபாலி வர்மா பெற்றார். ஷாபாலி வர்மா தனது 15 வயது, 285 நாட்களில் இருக்கும்போது இந்தப் போட்டியில் அரை சதம் அடித்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
மிகக்குறைந்த வயதில் சர்வதேச அளவில் அரை சதம் அடித்த சச்சின் சாதனையை எந்த இந்திய வீரரும் இதுவரை முறியடிக்காமல் இருந்த நிலையில் தற்போது வீராங்கனை ஷாபாலி வர்மா முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சர்வதேச அளவில் மிகக்குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஜோமாரி லாக்டென்பர்க் வைத்துள்ளார். இவர் தனது 14-வது வயதில் சர்வதேசப் போட்டியில் களமிறங்கி அரை சதம் அடித்தார்.
பிடிஐ