நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே.
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்டில் 11, டாம் லேத்தம் 14 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்தனர்.
அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் 102 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன்-டெய்லர் ஜோடி தொடர்ந்து 4-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
மறுமுனையில் அசத்தலாக ஆடிய ராஸ் டெய்லர் 115 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 15-வது சதமாகும். கடைசி 5 போட்டிகளில் அவர் எடுத்த 3-வது சதம் இது. 122 பந்துகளைச் சந்தித்த டெய்லர் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் குவித்தார். பின்வரிசையில் கிரான்ட் எல்லியட் 43 ரன்கள் எடுத்து வெளியேற, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து.
ஜிம்பாப்வே தரப்பில் பன்யங்காரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே பதிலடி
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் மஸகட்ஸா-சிபாபா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.5 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தது. சிபாபா 42 ரன்களில் வெளியேற, மஸகட்ஸாவுடன் இணைந்தார் கிரேக் இர்வின்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்க்க, ஜிம்பாப்வே வலுவான நிலையை எட்டியது. 99 பந்துகளைச் சந்தித்த மஸகட்ஸா 10 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் எல்டான் சிகும்பரா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சீன் வில்லியம்ஸ் களமிறங்க, 99 பந்துகளில் சதம் கண்டார் இர்வின். கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இர்வின் சிக்ஸரையும், பவுண்டரிகளையும் விரட்ட, 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்து வெற்றி கண்டது ஜிம்பாப்வே. இர்வின் 108 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 130, வில்லியம்ஸ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஜிம்பாப்வே.