எம்.எஸ். தோனி : கோப்புப்படம் 
விளையாட்டு

புதிய அவதாரம் எடுக்கும் தோனி : இந்தியா-வங்கம் பகலிரவு டெஸ்டில் சுவாரஸ்யம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையே வரும் 22-ம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இந்த போட்டியில் விருந்தாளி வர்ணனையாளராகப் பங்கேற்கிறார்.

இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் நடந்து வரும் நிலையில் வரும் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் நடக்கிறது.

இதுநாள் வரை இந்தியஅணி பகலிரவு டெஸ்ட் போட்டியிலும், பிங்க் பந்திலும் விளையாடியதில்லை. இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுவது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்புக்குரியதாக்க, முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து அவர்களை வர்ணனையாளராகப் பேச வைக்கப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் அனுமதி கோரியுள்ளது.

இந்திய அணிக்கு இதுவரை டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களின் கேப்டன் அனுபவம், மறக்க முடியாத டெஸ்ட் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது

டெஸ்ட் போட்டியின் முதல்நாள் மற்றும 2-வது நாளில் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்களாக இருந்த அனைவரையும் அழைத்து, தற்போதைய கேப்டன் விராட் கோலியுடன் தேசியகீதம் பாடும்போது நிற்கவைப்பது ஸ்டார் நிறுவனத்தின் மற்றொரு திட்டமாகும்.

அதன்பின ஒவ்வொரு கேப்டனாக வர்ணனையாளர் அறைக்கு அழைத்து அவர்களின் அனுபவம், மறக்க முடியாத டெஸ்ட் அனுபவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக மகேந்திர சிங் தோனிக்கும் ஸ்டார் நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் தோனி எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேறாமல் ஒதுங்கி இருக்கிறார். அவரின் ஆட்டத்தைக் காண அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கும் நிலையில், அவரை வர்ணனையாளராக பார்ப்பது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " இந்திய அணியின் அனைத்து முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைப்பது குறித்து ஒளிபரப்பாளர்கள் பிசிசிஐ க்கு விண்ணப்பித்துள்ளார்கள். அதன்மீது எந்தமுடிவும் இன்னும் எடுக்கவில்லை. பிசிசிஐ அனுமதியளித்தால், தோனி வர்ணனையாளர் பணியில் ஈடுபடுவார்" எனத் தெரிவித்தார்

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT