விளையாட்டு

நோ-பால்களைக் கவனிக்கவென்றே தனி டிவி நடுவர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னொரு புதுமை

செய்திப்பிரிவு

கடந்த ஐபிஎல் தொடரில் நடுவர்கள் நோ-பால்களை கவனிக்காமல் விட்டு விட்டது பெரும் சர்ச்சைகளை உருவாக்க 2020 ஐபிஎல் தொடரில் அம்மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க நோ-பால்களைக் கவனிக்க தனித்த டிவி நடுவர் ஒருவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இந்த டிவி நடுவர் வேறு, மற்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யும் டிவி நடுவர்கள் வேறு என்ற முறையில் ஐபிஎல் மேலும் ஒரு புதுமையைப் புகுத்தவுள்ளது.

இந்திய அணியின் சிறந்த நடப்பு கேப்டன் விராட் கோலி, முன்னாள் சிறந்த கேப்டன் தோனி ஆகிய இருவருமே ஐபிஎல் கிரிக்கெட்டில் நோ-பால் விவகாரத்தில் தங்கள் கோபாவேசங்களை களத்திலேயே காட்டியது கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் நடந்தேறியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி ஆட்டத்தில் கடைசி பந்தை லஷித் மலிங்கா நோ-பாலாக வீசியது நடுவரால் பார்க்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோலி இதனை “முட்டாள்தனமானது” என்று கடுமையாகச் சாடினார். மலிங்காவின் அந்தப் பந்து நோ-பால் என்று ஆகியிருந்தால் ஷிவம் துபே சிங்கிள் எடுக்க ஏ.பி.டிவில்லியர்ஸ் ஃப்ரீ ஹிட்டில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்தது, காரணம் டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதனையடுத்து 2020 ஐபிஎல் கிரிக்கெட்டில் நோ-பால்களை கண்காணிக்க தனித்த டிவி நடுவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT