புதுடெல்லி
டி20 போட்டிகளில் கடைசிக் கட்டத்தில் வந்து தோல்வி அடையும் வலிகள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இனிமேலும் இந்தியாவிடம் தோற்கத் தயாராக இல்லை என்று வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோற்கடித்தது. சர்வதேச அரங்கில் இந்திய அணியை டி20 போட்டியில் முதல் முறையாக வங்கதேச அணி நேற்றுதான் வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் முக்கியக் காரணமாக அமைந்தார். 60 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.
முதல் முறையாக இந்திய அணியை வென்றது குறித்து முஷ்பிகுர் ரஹிம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இந்தியாவுக்கு எதிராக ஏராளமான போட்டிகளில் வெற்றி வரை வந்து இழந்திருக்கிறோம். ஆதலால், அடுத்தமுறை இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியில் மோதினாலும், அந்தப் போட்டியில் வெற்றியை நழுவவிடக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு விளையாடத் தொடங்கினோம்.
என்னுடைய 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2 வாரங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சில போட்டிகளில் வென்றால் அனைத்தும் சரியான பாதையில் வந்து சேரும் வங்கதேசத்தை விட்டுப் புறப்படும் முன்பாக நான் கூறியிருந்தேன். அதைத்தான் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்று காட்டினோம். தொடர்ந்து இதே ஃபார்மில் இருக்க முயல்வோம். இனிமேலும் கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பறிகொடுக்கவும், தோல்வி அடையவும் தயாராக இல்லை.
இந்தியாவுக்கு எதிராக கடைசியாக நாங்கள் விளையாடிய 2 போட்டிகளில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். அதிலும் கடைசி ஓவர்களில்தான் நாங்கள் வெற்றியை இழக்கிறோம் என்பதால், அதிலிருந்து மீண்டுவர நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோம். அதிகமான பெரிய ஷாட்கள் அடிப்பதற்குப் பதிலாக, ஒரு ரன், இரண்டு ரன் எடுத்து சேர்த்தால் மாற்ற முடியும் என்று மகமதுல்லாவிடம் தெரிவித்தேன்.
இந்தத் தொடரில் இனிமேலும் வரும் போட்டிகளில் தோல்வி அடையமாட்டோம் என நம்புகிறோம். எங்களின் உண்மையான திறமையை அறிந்து, அச்சமின்றி விளையாட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இதுவரை ஒரு டி20 போட்டியில் வெல்லாத நிலையில் இந்த வெற்றி எங்களுக்கு சிறப்புக்குரியது. எங்கள் அணியின் முக்கிய இரு வீரர்களை நாங்கள் இழந்திருக்கிறோம். ஆனால், இளம் வீரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உழைத்துள்ளோம். இந்தியாவுக்கு எதிராகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியது அருமையானது''.
இவ்வாறு முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்