புதுடெல்லி
மோசமான ஃபீல்டிங், அனுபவமின்மையால் களத்தில் தவறான முடிவெடுத்தல் ஆகியவற்றுக்கு விலையாகவே நாங்கள் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ரிவ்யூ கேட்க வேண்டிய சூழலில் ரிஷப் பந்த் தனது அனுபவமின்மையால் கேட்காமல், அவுட் இல்லாததற்கு ரிவ்யூ கேட்டு வீணாக்கினார் என்பதை ரோஹித் சர்மா மறைமுகமாகச் சாடினார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதலாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. 149 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
போட்டி முடிந்த பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
''மோசமான ஃபீல்டிங், அனுபவமின்மையால் எது அவுட் எனக் கணிக்கத் தெரியாமல் ரிவ்யூவை வீணாக்கியது போன்றவற்றுக்கு விலையாகவே நாங்கள் தோல்வி அடைந்தோம். நாங்கள் அடித்த ஸ்கோர் வெற்றி பெறக்கூடியதுதான். ஆனால் ஃபீல்டிங்கில் ஏராளமான தவறுகளைச் செய்துவிட்டோம். எங்களின் அணியில் இருக்கும் வீரர்கள் அனுபவமற்றவர்கள். இதுபோன்ற தவறுகளிலிருந்துதான் அவர்கள் பாடம் கற்கவேண்டும். அடுத்த முறையாவது இதுபோன்ற செய்யாமல் இருப்பார்கள்தானே. டிஆர்எஸ் ரிவ்யூவில் தவறு நடந்தது எங்கள் பக்கம்தான்.
இந்தப் போட்டியில் வெற்றிக்கு உரியவர்கள், தகுதியானவர்கள் வங்கதேச அணியினர்தான். அவர்களைத் தவிர வேறுயாருக்கும் பெருமை போய் சேராது. தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சில் எங்களுக்கு நெருக்கடி அளித்தார்கள். பேட்டிங்கிலும் சரியாகச் செயல்பட்டார்கள்.
யஜுவேந்திர சாஹல் வீசிய ஒரு பந்தில் முஷ்பிகுர் ரஹ்மான் கால் காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இதை உணராமல் ரிஷப் பந்த் ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால், தொலைக்காட்சி ரீப்ளேயில் அது அவுட் என்பது தெளிவாகத் தெரிந்தது. இரண்டாவதாக சவுமியா சர்க்கார் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் அது கேட்ச் இல்லை, பேட்டில் பந்து படவில்லை எனத் தெரியாமல் டிஆர்எஸ் ரிவ்யூ செய்தார். ஆனால், அது தவறாக முடிந்து ரிவ்யூவை இழக்க நேர்ந்தது.
சாஹல் வீசிய ஒவரில் ஒரு பந்தை முஷ்பிகுர் காலை பின்னோக்கி நகர்த்தி ஆடினார். ஆனால், லெக் திசையில் காலில் பட்டது, அடுத்த பந்தை காலை பிரண்ட் புட் செய்து ஆடினார். அப்போதும் காலில் பந்து பட்டதைக் கவனிக்கவில்லை. இதற்கு அனுபவமின்மைதான் காரணம்.
இந்திய அணியில் சாஹல் முக்கியமான வீரர். நடுவரிசை ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசிய விக்கெட் வீழ்த்தவும், ரன்களைக் கட்டுப்படுத்தவும் அவருக்குத் தெரியும். அவர் அணியில் இருந்தால் கேப்டனின் வேலை எளிதாக அமையும்’’.
இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
பிடிஐ