விளையாட்டு

தொடர்ந்து தமிழக வீரர் அபிநவ் முகுந்த் புறக்கணிக்கப்படுவது ஏன்? - ஆர்.ஜே.பாலாஜி காட்டம்

செய்திப்பிரிவு

இந்திய அணிக்கு அபிநவ் முகுந்த் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் அபிநவ் முகுந்த். தமிழ்நாடு அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அருமையாக விளையாடி, இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 7 டெஸ்ட் மேட்ச்களில் விளையாடி 320 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக 2017-ம் ஆண்டு இலங்கையுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் சேர்த்ததே இவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

அதற்குப் பிறகு இவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், ரஞ்சி டிராஃபி உள்ளிட்ட போட்டிகளில் பிரமாதமாக விளையாடி வருகிறார். இவரை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்று காட்டமாகத் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சமீபமாகத் தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் உள்ள ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், "ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கிள் 50/100 அடித்தவர்களை இந்திய அணியில் சேர்க்க விரும்புகின்றனர். விஜய் ஹசாரே ட்ராபியில் மூன்று முறை 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஒரே வீரர் அபிநவ் முகுந்த்.

600 ரன்கள், சராசரி 52+ என இந்த சீசனின் இரண்டாவது அதிக ஸ்கோர்களை எடுத்தவர். ஆனால் இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவதில்லை, இந்திய அணியை விடுவோம், தியோதர் ட்ராபியில் கூட முகுந்த் தேர்ந்தெடுக்கவில்லை. பதிவுக்காக, இந்தியாவுக்கு அபிநவ் முகுந்தின் கடைசி இன்னிங்க்ஸில், ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் இலங்கைக்கு எதிராக 81 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் தேர்ந்தெடுக்கப்படவேயில்லை. ஆம், 81 ரன்கள் எடுத்தபிறகும் அவர் கைவிடப்பட்டார். அவருக்கு 29 வயதுதான் ஆகிறது. தொடர்ந்து விளையாடுங்கள், தொடர்ந்து போராடுங்கள் நண்பா" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜியின் இந்த ட்வீட்டுக்கு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT