ஜிம்பாப்வே தொடருக்கான ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஐபிஎல் புகழ் மணிஷ் பாண்டே இடம்பெற்றுள்ளார். நீண்ட காத்திருக்குப் பின் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பு அவரது திறமைக்காக கிடைத்த வாய்ப்பு என்பதை விட மூத்த வீரர்கள் பலர் ஓய்வு எடுத்துக் கொண்டதால் கிடைத்த வாய்ப்பு என்றே கூற வேண்டும், ஆனாலும் இவரது திறமையை குறைத்து எடைபோடுவதற்கில்லை.
உள்நாட்டு கிரிக்கெட்டில் தற்போது ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள்தான் ரன்களை குவித்து வருகின்றனர். மேலும் பார்ப்பதற்கு உற்சாகமூட்டக்கூடிய பேட்டிங் இவர்களுடையது. ரஞ்சி டிராபி அல்லது 4 நாட்கள் கிரிக்கெட், ஒருநாள், டி20 என்று இவர்கள் வேறுபாடு காட்டுவது கிடையாது.
அதிரடியாகத் தனது கரியரை தொடங்கிய தோனி தற்போது சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆடுகிறேன் என்று தனது ஆட்டத்தைச் சுருக்கிக் கொண்டதை நாம் பார்த்துவரும் அதே வேளையில் இவர்களுக்கோ பந்து விழும் லெந்த் மற்றும் திசைதான் கணக்கு. அதற்குரிய மரியாதையை அவர்கள் கொடுப்பார்கள். சூழ்நிலையின் சுமை இவர்களை பாதிக்காது என்பதையும் பார்த்து வருகிறோம்.
விராட் கோலி தலைமையில் 2008-ம் ஆண்டு இளையோர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் மணிஷ் பாண்டே விளையாடினார். அதன் பிறகு 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். 15 சதங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது தேர்வு, தனது எதிர்காலம் ஆகியவை பற்றி மணிஷ் பாண்டே ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வில் கூறும் போது, “எனது திறமையை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி, இந்திய அணியில் நீண்ட காலம் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
இந்த ஐபில் தொடரில் நான் 20-30 ரன்களையே எடுத்தேன் என்றாலும் நான் பேட்டிங் நன்றாகவே செய்து வந்தேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற தருணங்கள் உண்டு. ஆனால் நான் முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் நன்றாகவே ஆடியதாக கருதுகிறேன். எனது பேட்டிங் நிலவரம் குறித்து எனக்கு முழு திருப்தி உள்ளது, அதனை சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்வேன்.
அணியில் இடம்பெற எப்போதும் போட்டி இருப்பது நல்லது. அதுதான் இந்த ஆட்டத்தின் அழகு. இந்திய அணிக்காக எனது முதல் அனுபவம் இது. நான் நிறைய ஆட்டங்களில் இந்தியாவுக்காக ஆட விரும்புகிறேன், எனவே நிச்சயம் அதற்கான அடையாளங்களை இந்தத் தொடரில் ஏற்படுத்துவேன். அதனை செய்தாலே நான் மகிழ்ச்சியடைவேன், அதனை செய்யவே இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்.
எனக்கான வாய்ப்புக்காக நான் காத்திருக்க வேண்டும், ஏனெனில் போட்டிகள் நிறைய உள்ளன. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு நான் எதிர்பார்த்ததை விட சற்று தாமதமாகவே கிடைத்தது. ஆனால் அது பிரச்சினையல்ல. இந்திய அணியில் நீண்ட காலம் இடம்பெற வேண்டும் என்பதே லட்சியம். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று வடிவத்திலும் ஆடுவது சிறப்பானது. அதற்கான முயற்சியாகவே இந்த வாய்ப்பைக் கருதுகிறேன்” என்றார் மணிஷ் பாண்டே.
விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டித் தொடரில் 7 போட்டிகளில் 472 ரன்களை 118 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார் மணிஷ் பாண்டே. இதில் 4 முறை அரைசதங்கள் எடுத்துள்ளார். இதனால் கர்நாடகா கோப்பையை வென்றது.
மணிஷ் பாண்டே உலகக் கோப்பை 2015 இந்திய உத்தேச அணியில் 30 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.