இந்தியா சி அணியின் ஷுப்மன் கில் தனது சிறந்த லிஸ்ட் ஏ ஸ்கோரான 143 ரன்களை எடுக்க அசாத்திய பார்மில் இருக்கும் மயங்க் அகர்வால் 120 ரன்களை எடுக்க தியோதர் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சி அணி இந்தியா ஏ அணியை 232 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது.
ராஞ்சியில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஷுப்மன் கில் தலைமை இந்தியா சி அணி 50 ஓவர்களில் 366/3 என்று குவிக்க, தொடர்ந்து ஆடிய ஹனுமா விஹாரி தலைமை இந்தியா ஏ அணி ஜலஜ் சக்சேனாவின் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் 30வது ஓவரில் 134 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது, ஜலஜ் சக்சேனா 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சுருங்கக் கூறின் ஷுப்மன் கில் எடுத்த 143 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் 134 ரன்களில் இந்தியா ஏ சுருண்டது. மயங்க் அகர்வாலின் 120 ரன்களை விட 14 ரன்கள் கூடுதலாக எடுத்தது இந்தியா ஏ. இந்த அணியில் ஜெய்தேவ் உனாட்கட் 10 ஓவர்களில் 82 ரன்களை வாரி வழங்கினார். கடைசியில் சூர்ய குமார் யாதவ் இறங்கி இந்தியா சி அணியின் ஸ்கோரை கண்டபடி உயர்த்தினார், இவர் 29 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாசித்தள்ளியதால்தான் ஸ்கோர் மிகப்பெரிய 366 ரன்களை எட்டியது. இந்தியா ஏ அணியில் வள்ளல் உனாட்கட்டைத் தொடர்ந்து சித்தார்த் கவுல் 8 ஓவர்களில் 66 ரன்களை வாரி வழங்கினார்.
ஷுப்மன் கில், மயங்க் அகர்வால் முதல் விக்கெட்டுக்காக 38.3 ஓவர்களில் 226 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஷுப்மன் கில் தன் 143 ரன்களில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அடிக்க மயங்க் அகர்வால் 15 பவுண்டரிகள் ஒரு சிக்சரை தன் 120 ரன்களில் எடுத்தார். கார்க் ஆட்டமிழந்தவுடன் இறங்கிய சூர்ய குமார் யாதவ் ஸ்கூப் ஷாட், ஸ்வீப் ஷாட் என்று அசத்தி அரைசதத்தை விரைவு கதியில் எடுத்தார், கடைசி 3 ஓவர்களில் மட்டும் 61 ரன்களை வாரி வழங்கியது இந்தியா ஏ. சூரிய குமார் யாதவ் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களை தன் 72 ரன்களில் பின்னி எடுத்தார். சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசினார்.
இந்தியா சி அணி 366/3 என்ற பெரிய ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் போட்டிக்கு வராமல் ஆஃப் ஸ்பின்னர் ஜலஜ் சக்சேனாவிடம் 7 விக்கெட்டுகளைக் கொடுத்து சரணடைந்தது. இந்தியா சி அணிக்கு 4 புள்ளிகள்.