விளையாட்டு

துலீப் ட்ராபியில் பிங்க் நிறப்பந்தில் ஆடியவர்களிடம் இந்திய வீரர்கள் ஆலோசனை பெற வேண்டும்: சச்சின் அறிவுரை

செய்திப்பிரிவு

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகம் செய்வது நல்ல முடிவுதான் ஆனால் பனிப்பொழிவு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

“பனிப்பொழிவு பிரச்சினையாக மாறாத வரையிலும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி என்ற முடிவு நல்ல முடிவுதான். பனிப்பொழிவில் பந்து ஈரமானால் ஸ்பின்னர்களும் பந்தை இறுகப்பற்றி வீச முடியாது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பந்து வழுக்கும். பனிப்பொழிவு இல்லையெனில் இது ஒரு கூடுதல் சுவாரஸ்யம் என்பதில் சந்தேகமில்லை.

பகலிரவு டெஸ்ட் என்பதால் அலுவலகம் செல்பவர்கள் அலுவலகம் முடிந்து டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க வாய்ப்புள்ளது. வீரர்கள் கோணத்தில் பார்த்தாலும் பிங்க் நிறப்பந்துகள் எப்படி மரபான சிகப்பு நிறப்பந்துகளைக் காட்டிலும் வித்தியாசமாகச் செயல்படுகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்.

வலைப்பயிற்சியில் புதிய பிங்க் நிறப் பந்துகள், 20 ஓவர் முடிந்த பிங்க் நிறப்பந்துகள், 50 ஓவர் முடிந்த பழைய பந்துகள் என்று வரவழைத்து வீரர்கள் வலையில் பயிற்சி செய்வது அவசியம். இதற்கு ஏற்றவாறு பேட்டிங் உத்தியை வடிவமைக்க வேண்டும்.

மேலும் துலீப் ட்ராபியில் பிங்க் நிறப்பந்தில் ஆடிய வீரர்களிடம் இந்திய வீரர்கள் ஆலோசனைகளைப் பெற வேண்டும். அவர்களிடம் இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கும்.

நிச்சயமாக பிட்சில் கொஞ்சம் புற்கள் இருப்பது வேகப்பந்து வீச்சுக்கு பயனளிக்கும் அதே போல் தரமான ஸ்பின்னர் ஒருவர் இதில் எப்படி வீச வேண்டும் என்பதையும் அறிந்தவராக இருப்பார்.

விக்கெட் கீப்பரும் பந்து எப்படி வருகிறது என்பதை பவுலர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

SCROLL FOR NEXT