ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் மது அருந்திவிட்டு கார் ஓட்டி இங்கிலாந்து போலீஸிடம் சிக்கி, வியாழன் இரவு சிறையில் கழித்தார்.
இவர் லங்காஷயர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். இதனையடுத்து அடுத்த போட்டிக்கு இவரை லங்காஷயர் தேர்வு செய்யவில்லை.
இதனையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால், ஆஷஸ் தொடருக்குப் பிறகான ஒருநாள் தொடர் அணியில் பாக்னர் இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது.
கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் பாக்னர் மீது புகார் பதிவு செய்ததையடுத்து ஜூலை 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அவரது ரத்தத்தில் இருமடங்கு ஆல்கஹால் இருந்ததாக பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து வியாழன் இரவு அவர் சிறையில் கழித்தார்.
இவருடன் டிம் பெய்ன் என்ற மற்றொரு ஆஸ்திரேலிய வீரரும் இருந்தார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த சம்பவத்தை கணக்கில் கொண்டு அவருக்கு 8 போட்டிகள் வரை ஆடத் தடை விதிக்கலாம் என்று தெரிகிறது.
மது அருந்திவிட்டு கார் ஓட்டியதற்காக தான் மன்னிப்பு கேட்பதாக ஜேம்ஸ் பாக்னர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஜேம்ஸ் பாக்னர்.
டேரன் லீ மேன் பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கட்டுப்பாடின்றி இருப்பதாகவும், வீரர்களை கண்டிப்புடன் அவர் வைத்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளது.