நியூஸிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடராக பிளங்கெட் ஷீல்ட் தொடரில் கேண்டர்பரி அணிக்கு எதிராக வெலிங்டன் அணிக்கு ஆடிய டெவன் கான்வே 334 பந்துகளில் 327 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இவர் இடது கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 48 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். 1991ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்கில் பிறந்தவர் டெவன் கான்வே. இவர் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஆடி வருகிறார். இந்நிலையில் அடுத்த செப்டம்பரில் இவர் நியூஸிலாந்து தேசிய அணிக்கு ஆடத் தகுதி பெற்று விடுவார்.
நியுஸிலாந்தில் எடுக்கப்படும் 8வது முச்சதமாகும் இது. பிளங்கெட் ஷீல்ட் தொடரில் 6வது முச்சதமாகும் இது.
இந்த இன்னிங்சில் வெலிங்டன் அணி 20/3 என்றும் பிறகு 54/4 என்றும் தடுமாறி வந்தது. பிறகு டெவன் கான்வே 3 பேர்களுடன் சதக்கூட்டணி அமைக்க வெலிங்டன் அணி 118 ஓவர்களில் 525/7 என்று டிக்ளேர் செய்தது.
சவால் அளிக்கும் பந்து வீச்சை அதிரடி முறையில் எதிர்கொண்டு அணியை மீட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய டெவன் கான்வே இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 98 போட்டிகளில் 6088 ரன்களை எடுத்துள்ளார். 44.76 என்ற சராசரியில் 16 சதங்களையும் 28 அரைசதங்களையும் அவர் இதுவரை எடுத்துள்ளார்.
லிஸ்ட் ஏ 50 ஒவர் போட்டிகளில் 71 ஆட்டங்களில் 2551 ரன்களை 6 சதங்கள், 14 அரைசதங்களுடன் 43.23 என்ற ஆரோக்கியமான சராசரியில் எடுத்துள்ளார்.
அடுத்த செப்டம்பரில் இந்த டெவன் கான்வே சர்வதேச கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக இறங்கி கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.