டாக்கா
ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசனுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி டெஸ்ட் போட்டிகளுக்கு மோமுனுள் ஹக், டி20 போட்டிகளுக்கு மகமதுல்லா ரியாத் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆல்ரவுண்டர் சகிப் அல்ஹசன், டி20, டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். ஐசிசி விதித்துள்ள தடையால், புதிதாக இரு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மகமதுல்லா:
நவம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்கிறது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், சூதாட்டத் தரகர் ஒருவர் வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3 முறை அணுகியதாகவும், ஆனால், அவர் மறுத்துவிட்டதையும் ஐசிசி கண்டுபிடித்தது. ஐசிசி விதிமுறைப்படி, சூதாட்டத் தரகர் யாரேனும் வீரர்களை அணுகினால், உடனடியாக ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சகி்ப் அல்ஹசன் அவ்வாறு தெரிவிக்காததையடுத்து, 2 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி நேற்று உத்தரவிட்டது.
டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மோமினுள் ஹக்
இந்தத் தடையால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் சகிப் அல்ஹசனால் பங்கேற்க முடியாது.
இந்நிலையில் சகிப் அல்ஹசனுக்குப் பதிலாக ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற்ற இளம் வீரர் தைஜுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், தமிம் இக்பால், முகமது சைபுதீன் ஆகியோர் இல்லாத நிலையில் முகமது மிதுன், இம்ருல் கையஸ், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சகிப் அல்ஹசனுக்கு விதிக்கப்பட்ட தடையால், டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக மோமுனுள் ஹக், டி20 போட்டிகளுக்கு மகமதுல்லா ரியாத் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச டி20 அணி விவரம்:
மகமதுல்லா (கேப்டன்) லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நைம், முஷ்பிகுர் ரஹிம், ஆபிப் ஹூசைன், மொசாடக் ஹூசைன், அனினுல் இஸ்லாம், அராபத் சன்னி, அல் அமின் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், சைபுல் இஸ்லாம், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், அபு ஹைதர்
வங்கதேச டெஸ்ட் அணி விவரம்:
மோகினுள் ஹக் (கேப்டன்), சாத்மான் இஸ்லாம், இம்ருல் கையஸ், சைப் ஹசன், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், மகமதுல்லா, முகமது மிதுன், மொசாடக் ஹூசைன், மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், அல்-அமின் ஹூசைன், அபு ஜயத், இபாதத் ஹூசைன்.
பிடிஐ