விளையாட்டு

பாலின பேதத்துக்கு எதிராக தொடரும் தமிழக வீராங்கனை தீபிகாவின் புறக்கணிப்பு போர்!

பாரதி ஆனந்த்

இந்த நாட்டில் பெண் பிரதமராக இருந்திருக்கிறார். பெண்கள் பலர் மாநில முதல்வராக இருக்கின்றனர். பெண் நீதிபதி, பெண் பைலட் என பலரும் பல துறைகளிலும் உண்டு. ஆனால், இவை மட்டும் இந்திய சமுதாயத்தில் பாலின சமன்பாடு எட்டப்பட்டுவிட்டது என்பதற்கு ஓர் அளவுகோலாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது என்பதை விளக்க அவலங்கள் பல கொட்டிக்கிடக்கின்றன.

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் காமென்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் பெற்று தேசத்தின் அடையாளமாக இருக்கிறார் தமிழக வீராங்கனை தீபிகா பல்லிக்கல். உலகின் 10 சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையும் அவர் பெற்றுத் தந்ததே.

ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியை தொடர்ந்து 4-வது ஆண்டாக அவர் புறக்கணித்துள்ளார்.

ஏன் புறக்கணித்துள்ளார். இதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். காரணத்தை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறும்போது, "கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஏன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை புறக்கணித்தேனோ, அதே காரணங்களுக்காகவே இந்த முறையும் இப்போட்டியை புறக்கணித்திருக்கிறேன். ஆம், ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகள் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.

ஆனால், ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு பரிசுத் தொகையாக ரூ.1,20,000 வழங்கப்படுகிறது. ஆனால், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு வெறும் ரூ.50,000 மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் விளையாடும் பெண்களும் ஆண்களுக்கு சமமான பரிசுத் தொகையைப் பெற தகுதி இருக்கிறது என நான் நம்புகிறேன். இதில், ஆண் - பெண் என்ற பேதம் தேவையில்லையே" எனக் கூறியுள்ளார்.

அவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காதது ஏமாற்றமளிக்கிறது எனக் கூறியுள்ள கேரள மாநில ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் செயலாளர் அனீஷ் மேத்யூ, அவரது இந்த முடிவை நான் மதிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பரிசுத் தொகை வழங்குவதில் பாலின பாகுபாடு இருந்தாலும், சர்வதேச போட்டிகளில் இரு பாலருக்கும் சமமான பரிசுத் தொகையே வழங்கப்படுகிறது.

இதைச் சுட்டிக்காட்டி தீபிகா முன்வைக்கும் கேள்வி இதே, "சர்வதேச போட்டிகளில் ஸ்குவாஷ் விளையாட்டுகளின் பெண் வெற்றியாளர்களுக்கு ஆண்களுக்கு சமமாக பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்றால், இந்தியாவில் ஏன் அது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது?"

4 வருடங்களாக செவி சாய்க்கப்படாத தமிழக வீராங்கனையின் கோரிக்கைக்கு இனியாவது பதில் கிடைக்குமா? சம்பந்தப்பட்ட துறை கவனிக்குமா?

SCROLL FOR NEXT