விளையாட்டு

சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 10 - வது பட்டம் வென்றார் பெடரர்

செய்திப்பிரிவு

பாஸல் 

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 10-வது முறையாக பட்டம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயதான அலெக்ஸ் டி மினாரை எதிர்த்து விளையாடினார். இதில்ரோஜர் பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன்பட்டம் வென்றார். சுவிஸ் உள்ளரங்க சாம்பியன்ஷிப்பில் பெடரர் கோப்பையை வெல்வது இது 10-வது முறையாகும்.

மேலும் சர்வதேச போட்டியில் அவர் வென்ற 103-வது பட்டமாக இது அமைந்தது. சுவிஸ் போட்டியில் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் 500 ஏடிபி புள்ளிகளை பெற்றதுடன் சுமார் ரூ.3.37 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றார்.

ரோஜர் பெடரர் கூறுகையில், “அலெக்ஸும் சிறப்பாக விளையாடினார். ஒட்டுமொத்தத்தில் இருவருமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் எனது சொந்த நாட்டில் 10-வது முறையாக கோப்பையை வென்றது மறக்க முடியாத தருணமாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT