அடிலெய்டில் ஞாயிறான இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் தன் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் லஷித் மலிங்கா முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து பெரும்தவறிழைத்தார். குறிப்பாக ரஜிதா என்ற வேகப்பந்து வீச்சாளரை ஆஸ்திரேலியா புரட்டி எடுத்தனர். இவர் 4 ஓவர்களில் 4 டாட்பால்களை மட்டுமே வீசி 7 நான்குகள், 4 ஆறுகள் மூலம் 75 ரன்கள் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை 4 ஓவர்களில் கொடுத்த ஒரே வீரராகத் திகழ்தார், டேவிட் வார்னர் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் சதமெடுக்க ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 233 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இலங்கை வார்னரின் ஸ்கோரைக் கூட எடுக்க முடியாமல் சாம்ப்பா, ஸ்டார்க், கமின்ஸ் ஆகியோரது பந்து வீச்சில் 20 ஓவர்களில் 99/9 என்று முடிந்து 134 ரன்கள் என்ற படுதோல்வியைச் சந்தித்தது.
ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அதிகபட்ச ஸ்கோராகும் இது ஒட்டுமொத்தமாக 4வது டி20 அதிகபட்ச அணி ஸ்கோராகும் இது. ஸ்டீவ் ஸ்மித் இறங்க வேண்டிய தேவையே இருக்கவில்லை.
ஏரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 8 நான்குகளையும் 3 ஆறுகளையும் விளாசி 64 ரன்கள் எடுக்க, வாரனர் 56 பந்துகளில் தன் முதல் சர்வதேச டி20 சதமெடுக்க முன்னால் களமிறக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 62 ரன்கள் விளாசினார்.
கசுன் ரஜிதா 4 ஓவர்களில் 75 ரன்கள் விளாசப்பட்டதில் கண்ணீருடன் வெளியேறினார். டி20 கிரிக்கெட்டில் மிகவும் ரன்கள் கொடுத்த வீரர் ஆனார் ரஜிதா.
இது ட்ராப் இன் பிட்ச், பிரமாதமான பேட்டிங் பிட்சில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர்களை முதலில் இறக்கி செம அடி வாங்கியுள்ளார் கேப்டன் மலிங்கா.
பிஞ்ச், வார்னர் சேர்ந்து 65 பந்துகளில் 122 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். முதல் 10 ஓவர்களில் 112 ரன்கள். பிஞ்ச் போனவுடன் இறங்கிய மேக்ஸ்வெல் அபாரமான கற்பனைத்திறத்துடன் பவர் பேட்டிங்கையும் செய்து டிவில்லியர்ஸ் இல்லாத கிரிக்கெட் உலகில் நான் இருக்கிறேன் என்று அவர் பாணியிலேயே சுற்றி சுற்றி அடித்தார். மலிங்கா மட்டுமே 4 ஒவர்கலில் 37 என்று குறைவாக கொடுக்க, நல்ல சிக்கனமாக வீசியதில் நுவான் பிரதிப் 28 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி வீரர்கள் ‘மார்ச் ஃபாஸ்ட்’ போல் வரிசையாக வெளியேறத் தொடங்கினர். ஸ்டார்க், கமின்ஸ், ஆகர், ஸாம்பா பிரமாதமாக வீச 71/6 என்று மடிந்தது பிறகு 99 ரன்களுக்கு சுருண்டது, ஸ்டார்க், கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், ஆகர் 1 விக்கெட்டையும் கைப்பற்ற வார்னர் ஸ்கோரையே எடுக்க முடியாமல் 99/9 என்று முடிந்தது இலங்கை.
இது உண்மையில் இலங்கை அணிக்கு ஒரு கெட்ட சொப்பன மேட்ச்தான்.
ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.