அடிலெய்டு
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் அடிலெய்டு நகரில் இன்று நடைபெறுகிறது.
3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத்தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டு நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு காலம் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கடந்த மே மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அணிக்கு மீண்டும் திரும்பினர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இருவரும் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்மித்தும், வார்னரும் தடை காலத்துக்கு பிறகு முதன்முறையாக சர்வதேச டி 20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் சீருடையை அணிய உள்ளனர். இவர்களது வருகையால் ஆஸ்திரேலிய அணி மேலும் வலுவடையக்கூடும்.
ஆஷஸ் தொடரில் ஸ்மித் ரன்வேட்டையாடி இருந்தார். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையைதக்கவைத்துக் கொண்டதில் ஸ்மித் பெரும் பங்கு வகித்திருந்தார். அதேவேளையில் அந்தத் தொடரில் டேவிட் வார்னரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படவில்லை.
டேவிட் வார்னர்
எனினும் டி 20 வடிவில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் வேட்டையாடியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டேவிட் வார்னரிடம் இருந்து மீண்டும் ஒரு முறை சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் தொடக்க பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பின்ச் மட்டையை சுழற்ற காத்திருக்கிறார்.
கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் காரே ஆகியோரும்அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். பந்து வீச்சை பொறுத்தவரையில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருடன் கேன் ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா நெருக்கடி தரக்கூடும்.
இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்குகிறது. பாதுகாப்பு காரணங்களை கருதி அந்தத்தொடரில் முன்னணி வீரர்கள் பலர்விலகிக்கொள்ள 2-ம் தர வீரர்களைஉள்ளடக்கிய இலங்கை அணியேபாகிஸ்தான் சென்று விளையாடி கோப்பையை வென்றிருந்தது.
இந்தத் தொடரில் அசத்திய பானுகா ராஜபக்ச, ஓஷாடா பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது. குசால் பெரேரா, நிரோஷன் திக்வெலா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். கேப்டனும் சீனியர் வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா தனது யார்க்கர்களால் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.