விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் சாய்னா தோல்வி

செய்திப்பிரிவு

பாரீஸ் 

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் போராடி தோல்வியடைந்தார்.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 9-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 16-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சாய்னா நெவால் 20-22, 21-23 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டில் சாய்னா ஒரு கட்டத்தில் 20-19 என மிக நெருக்கமாக முன்னிலையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் அன் சே யங் தொடர்ச்சியாக 3 புள்ளிகளை குவித்து முதல் செட்டை தன்வசமாக்கினார். அதேவேளையில் 2-வது செட்டில் அன் சே யங் ஒரு கட்டத்தில் 16-11 என முன்னிலை வகித்தார்.

அப்போது கடும் சவால் அளித்த சாய்னா ஆட்டத்தை 18-18 என சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

எனினும் பதற்றம் அடையான யங் அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்து வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT