வங்கதேச பிரிமீயர் லீக்கை மீண்டும் தொழில்முறை ரீதியாக நடத்த வேண்டும், வீரர்களின் ஒப்பந்தத் தொகையை உயர்த்த வேண்டும், ஒப்பந்தப் பட்டியலில் அதிக வீரர்களை இடம் பெறச் செய்ய வேண்டும், முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். வாரிய வருமானத்தில் ஒரு சதவீதம் வழங்க வேண்டும், மகளிர் கிரிக்கெட்டில் பெண் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த திங்கட் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கேப்டன் ஷகிப் அல்ஹசன், முஸ்பிகுர் ரகிம், மஹ்மதுல்லா, தமிம் இக்பால் மற்றும் முதல்தர கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 50 பேர்பங்கேற்றனர். இதனால் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 3 டி 20, 2 டெஸ்ட் போட்டி கொண்டதொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் வங்கதேச வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று முன்னம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாரிய நிர்வாகிகள் உறுதி அளித்ததன் அடிப்படையில் வங்கதேச வீரர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஷகிப் அல்ஹசன் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் நாங்கள் மீண்டும் தேசிய கிரிக்கெட் லீக் மற்றும்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளோம். 11 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வாரிய வருமானத்தில் ஒரு சதவீதம் வழங்க வேண்டும், மகளிர் கிரிக்கெட்டில் பெண் வீராங்கனைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வீரர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.
வீரர்கள் நலச்சங்கத்தில் தற்போது விளையாடும் வீரர்களும் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான் எங்களது பிரச்சினைகளை வாரியத்துடன் தொடர்ந்து விவாதிக்க முடியும்” என்றார்.
போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான தொடர் நடைபெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. - பிடிஐ