இந்திய அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூற்றுக்களை வைத்துப் பார்க்கும் போது இந்திய விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனியின் காலம் முடிவுக்கு வருகிறது என்ற தோற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் தோனி, நிரந்தர ஓய்வு பெற வேண்டியதுதானா என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு எழும் விதமாக, எம்.எஸ்.கே.பிரசாத் திட்டவட்டமாகக் கூறுவது என்னவெனில், “உலகக்கோப்பைக்குப் பிறகு எங்கள் சிந்தனைப் போக்கு தெளிவாக இருக்கிறது. நாங்கள் ரிஷப் பந்த் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
மீண்டும் மீண்டும் தோனி பற்றிய கேள்விகள் கேட்கப்பட தோனி நீக்கப்பட்டார் என்று கூற தைரியமில்லாத நிலையில், “உலகக்கோப்பைக்குப் பிறகு நாங்கள் மேலே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உலகக்கோப்பைக்குப் பிறகே நான் தெளிவுபடுத்தி விட்டேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் அணியில் தங்களை நிலைநிறுத்துகிறார்களா என்பதைப் பார்க்கிறோம்.
ரிஷப் பந்த்தை எடுத்திருக்கிறோம், ஏன்...? சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்துள்ளோம். இப்போது நாங்கள் என்ன சிந்திக்கிறோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவது, அல்லது ஓய்வு பெற முடிவெடுப்பது என்பது அவரது தனிப்பட்ட விஷயம். நாங்கள் ஏற்கெனவே எதிர்காலத்துக்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். இதனை நாங்கள் செய்யும் அணித்தேர்வைக் கொண்டே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உலகக்கோப்பைக்குப் பிறகே நாங்கள் ரிஷப் பந்த் மீதுதான் முழு கவனமும் செலுத்தி வருகிறோம் இதுதான் எங்களது சிந்தனைப் போக்கும் கூட” என்றார் எம்.எஸ்.கே. பிரசாத்.