செம்ஸ்போர்டில் நடைபெறும் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓவர்களில் 562 ரன்களை விளாசி தள்ளியது.
நேற்று தொடங்கிய இந்த 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற எஸ்ஸெக்ஸ் அணியின் கேப்டன் ரவி பொபாரா முதலில் ஆஸ்திரேலியாவை தெரியாமல் களமிறக்கி விட்டார்.
ஆனால் எஸ்ஸெக்ஸ் பந்து வீச்சு அவ்வளவு பலமானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், ஜே.ஏ.போர்ட்டரை விட்டால் அடுத்த முனையில் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் பந்து வீசினார். சாலிஸ்பரி, வெஸ்ட்லி, ரியான் டென் டஸ்சாதே, நிஜ்ஜர், பிரவுன் என்று 8 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
டேவிட் வார்னர் 86 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசினார். ஷேன் வாட்சன் 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார்.
முதலில் கிறிஸ் ராஜர்ஸ் 21 ரன்களில் மூர் பந்தில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய கேப்டன் கிளார்க் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பிறகு வாட்சன், வார்னர் கொண்டு சென்றனர். வாட்சனும், வார்னரும் 13 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ஸ்கோர் 132 ரன்களில் 94 எடுத்திருந்த வார்னர் வெளியேறினார்.
பிறகு வாட்சன், வோஜஸ் சேர்ந்து ஸ்கோரை 204க்கு உயர்த்திய போது வாட்சன், டென் டஸ்சாதே பந்தில் பவுல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆட அடுத்த 10 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்கப்பட்டது. வோஜஸ் அப்போது 49 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அடுத்ததாக மிட்செல் மார்ஷுடன் சேர்ந்தார் பி.எம்.நெவில். இருவரும் அடித்து நொறுக்கினர். 38 ஓவர்களில் ஸ்கோர் 252/5 என்பதிலிருந்து 440க்கு உயர்ந்தது 188 ரன்கள் விளாசப்பட்டது. நெவில் 113 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
முதல் நாள் ஆட்டத்தில், 118 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 100 எடுத்த மிட்செல் மார்ஷ், முடிவில் 136 நாட் அவுட்டாக இருந்தார்.
முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா 89.4 ஓவர்களில் 440 ரன்களை விளாசி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 118 பந்துகளில் சதம் கண்ட மிட்செல் மார்ஷ் இன்று 188 பந்துகளில் 169 ரன்களை எடுத்தார். இதில் 20 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்.
கடைசியில் பீட்டர் சிடில் 37 ரன்களையும், நேதன் லயன் 30 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க 111 ஓவர்களில் 562 ரன்களை முதல் இன்னிங்சில் விளாசியது ஆஸ்திரேலியா.