கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட புகார்கள் காரணமாக உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-யை சீர்த்திருத்தும் நோக்கத்துடன் நியமித்த நிர்வாகக் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்த வரலாற்றறிஞர், கிரிக்கெட் ஆர்வலர் ராமச்சந்திர குஹா மற்றும் விக்ரம் லிமாயே ஆகிய இருவரும் அந்தப் பொறுப்பு வகித்ததற்கான சம்பளத்தை வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.
லோதா கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் பிசிசிஐயில் நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் செய்ய உச்ச நீதிமன்றம் 2017-ல் நிர்வாகக் கமிட்டி (சிஓஏ) என்பதை நியமித்தது. இந்தக் குழுவில் ராமச்சந்திர குஹா, தற்போது தேசியப் பங்குச் சந்தையில் நிர்வாக இயக்குநராக இருக்கும் விக்ரம் லிமாயே, முன்னாள் சிஏஜி விநோத் ராய், முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இப்போது சிஓஏ கலைக்கப்பட்டு பிசிசிஐ கங்குலி தலைமையில் முழு நிர்வாகக் குழுவினை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் சிஓஏ-வாக 4 மாதங்கள் இருந்த ராமச்சந்திர குஹாவுக்கு ரூ.40 லட்சம் சம்பளம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தப் பொறுப்பில் சேரும்போதே தனக்கு இதற்காக எந்தத் தொகையும் வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்த ராமச்சந்திர குஹா, தற்போது பிசிசிஐ தலைமை நிதி அதிகாரியிடம் இருந்து தனக்கு இந்தச் சம்பளம் குறித்து வந்த கடிதம் குறித்து கூறும்போது, “இந்தக் கடிதமும் அதன் உள்ளடக்கங்களும் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நான் தொடக்கத்திலேயே சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். இப்போதும் இந்தச் சம்பளத்தை நான் ஏற்க மாட்டேன், என் மனசாட்சி இதற்கு அனுமதியளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் சுமார் ரூ.70 லட்சம் வரையிலான சம்பளத்தை விக்ரம் லிமாயேவும் வேண்டாம் என்று துறந்துள்ளார்.
சிஓஏ நியமனக்க்காலத்திலிருந்தே கடும் சர்ச்சைகளைச் சந்தித்து வந்தது. 4 மாதங்களில் ராமச்சந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
தன் கடிதத்தில் அவர் இந்திய கிரிக்கெட்டில் நிலவும் செல்வாக்கு மிகுந்த வீரர்களின் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம், நிர்வாகம் முழுதும் ஊறிப்போன ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகள், ஐபிஎல் ஆடாத உள்நாட்டு வீரர்களின் நலன்கள் புறக்கணிப்பு தொடர்பாக விமர்சனம் மேற்கொண்டு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மனசாட்சி இடமளிக்காது என்று ரூ.40 லட்சம் சம்பளத்தை அவர் துறந்துள்ளார்.