விளையாட்டு

இன்று 2-வது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

செய்திப்பிரிவு

இந்தியா-ஜிம்பாப்வே அணி கள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே தலை நகர் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.

ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, இரு போட்டிகள் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா. அதேநேரத்தில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இன்றைய போட்டியே கடைசி வாய்ப்பாகும்.

இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் அதிரடி தொடக்கம் ஏற்படுத்திய முரளி விஜய் இந்த ஆட்டத்தையும் பயன்படுத்திக் கொள்வார். இதுதவிர கேப்டன் ரஹானே, உத்தப்பா, பாண்டே, கேதார் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி என வலுவான பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், மோஹித் சர்மா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அக் ஷர் படேல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது.

ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. சிபாபா, கேப்டன் சிகும்பரா, மஸகட்ஸா, கவென்ட்ரி, இர்வின் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும் அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை.

பந்துவீச்சில் மட்ஸிவா, மோபு, உட்சேயா, கிரெமர் போன்றோர் இருந்தபோதிலும் இந்தியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாதது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

போட்டி நேரம்: மாலை 4.30

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட், தூர்தர்ஷன்

SCROLL FOR NEXT