ராஞ்சி
ராஞ்சியில் நடந்துவரும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி பாலோ-ஆன் வழங்கியது.
2 விக்கெட் இழப்புடன் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து, இந்திய அணியைக் காட்டிலும் 335 ரன்கள் பின்தங்கி தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது. ஆதலால், இந்திய அணியின் விராட் கோலி 2-வது டெஸ்ட் போட்டியைப் போல் பாலோ-ஆன் வழங்கினார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 56.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏறக்குறைய இன்று 47 ஓவர்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.
முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் சேர்த்திருந்தது. ஹம்ஸா ரன் சேர்க்காலும், டூப்பிளஸிஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இருவரும் ஆட்டமிழக்காமல் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலை நேரத்தின் குளிர்ச்சி, ஆடுகள ஈரப்பதம் ஆகியவற்றைப் பயன்படுத்திய உமேஷ் யாதவ், முதல் ஓவரின் 5-வது பந்தில் க்ளீன் போல்டாக்கி ஒரு ரன்னில் டூப்பிளஸியை வெளியேற்றினார்.
அடுத்து வந்த பவுமா, ஹம்ஸாவுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தார்கள். இந்திய அணியின் ஜடேஜா, நதீம், அஸ்வின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதற்கு இருவரும் மிகுந்த சிரமப்பட்டு ரன்களைச் சேர்த்தனர். இதில் ஹம்ஸா ஓரளவுக்கு நிலைத்தபின் தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். 56 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டனர்.
ஜடேஜா வீசிய ஓவரில் பந்தை ஸ்டெம்ப் அருகே விட்டு கட் செய்ய முயன்றார் ஹம்ஸா. ஆனால், பந்து வேகமாக வந்து திரும்பியதால், ஹம்ஸாவால் நினைத்த ஷாட்டை ஆட முடியாமல் பந்து ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. ஹம்ஸா 62 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து கிளாஸன் களமிறங்கி, பவுமாவுடன் சேர்ந்தார். இருவரும் களத்தில் நிலைபெறுவதற்குள், அடுத்த ஓவரில் நதீம் தனது முதல் விக்கெட்டாக பவுமாவை வெளியேற்றினார்.
நதீம் வீசிய பந்தில் அடித்து ஆட முற்பட்ட பவுமாவை 32 ரன்களில் விக்கெட் கீப்பர் சாஹா ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். அடுத்துவந்த பீடெட் கிளாஸனுடன் சேர்ந்தார். கிளாஸன் 6 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
பீடெட், லிண்டே இருவரும் ஜோடி சேர்ந்தனர். உணவு இடைவேளைக்குப் பின் இருவரும் மீண்டும் பேட் செய்தனர். முகமது ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பீடிட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா ரன் ஏதும் சேர்க்காமல் ரன் அவுட் ஆகினார். நிதானமாக ஆடிய லிண்டே 37 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நார்ட்ஜே, இங்கிடியுடன் சேர்ந்தார்.
நார்ட்ஜே 4 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் நதீம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 56.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, நதீம், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.